பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
03:04
பூமி சம்பந்தப்பட்ட தொழில் சிறக்க வராகமூர்த்தியை வணங்குங்க...
பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து உலகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்தவன். அவன் ஒரு சமயம் மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு வலிமை உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான். அங்கே அவன் கண்களுக்கு பகவான் தென்படவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்தான். அப்போது ஓரிடத்தில் பூமாதேவி தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். அவன் கண்களுக்கு உருண்டை வடிவத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதுபோல் தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அவள் அழகாக இருப்பதைக் கண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவளைத் தூக்கிக் கொண்டு பாதாள உலகம் விரைந்தான்.
“பகவானே, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பூமாதேவி அபயக்குரல் கொடுத்தாள். அந்தக் குரல் மகாவிஷ்ணுவின் காதில் விழுந்தது. பூமாதேவி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பாதாள லோகம் சென்று இரண்யாட்சனை வதம்செய்து, பூமியைத் தன் கோரைப் பற்களால் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். வராகராய்க் காட்சிதந்த மகாவிஷ்ணுவை பூமாதேவி அன்புடன் பார்த்து ஆரத்தழுவினார். அதனால் மகிழ்ந்த வராகர் அவளைத் தானும் தழுவினார். இவ்வாறு அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்ட காலம் ‘தேவவருஷம்’ என்கிறது புராணம். இருந்தாலும் அது அந்தி நேரம். அதன் விøளாக ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் பவுமன். இவனே பிற்காலத்தில் நரகாசுரன் ஆனான் என்கிறது புராணம்.
வராகப்பெருமாளுக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. வைணவத் திருத்தலங்களில் தனிச்சன்னிதியும் உண்டு.
அந்த வகையில் கும்பகோணத்தில் ஆதிவராகர் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் மகாமகம் உண்டாவதற்குக் காரணமான பிரளய காலத்திற்கு முன்பாகவே இவர் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே, இவரை ‘ஆதிவராகர்’ என்று போற்றுகின்றனர். இவரே இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்திருத்தலத்து ஆதிவராகமூர்த்தி ஆகிய ஐவரும் காவேரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.
இங்கு, மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி வராகரை வணங்கியபடி காட்சி தருகிறாள். வீடு, நிலம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அது தீருவதாக நம்பிக்கை. கோரைக்கிழங்கைப் பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை, நெய் கலந்து உருண்டையாகப் பிடித்து சுவாமிக்கு அமுதாகப் படைப்பது வழக்கம். இதனை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர். இங்கு சுவாமி அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்ற கோலத்தில் தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் பூவாராகப் பெருமாளாக வராகமூர்த்தி வழிபடப்படுகிறார். இங்கும் இவருக்கு கோரைக்கிழங்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
சென்னைக்கு அருகேயுள்ள திருவிடந்தைத் திருத்தலத்தில் அகிலவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்லிடைக்குறிச்சி திருத்தலம். இங்கு அருள்புரியும் வராகரை லட்சுமி வராகர் என்று போற்றுவர். மகாலட்சுமி வராகரின் இடது தொடையில் அமர்ந்து அற்புதக் காட்சி தருகிறாள். பூமாதேவித் தாயாருக்கு தனிச்சன்னிதியும் உள்ளது. ஆதிவராகர் என்னும் லட்சுமி வராகர் கோயில் தாமிரபரணியின் தென்கரையில் அமைந்துள்ளதால், என்றும் இக்கோயில் குளிர்ச்சியாக இருப்பது தனிச்சிறப்பாகும்.
திருப்பதி திருமலையில் ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தக்கரையில் வராகப்பெருமாளுக்கு கோயில் உள்ளது. இவருடைய அனுமதி பெற்றே ஸ்ரீனிவாசப் பெருமாள் மலைமீது கோயில் கொண்டுள்ளார். பக்தர்கள் அங்குள்ள புஷ்கரணியில் நீராடி வராகப் பெருமாளை தரிசித்து விட்டுதான் ஸ்ரீனிவாசப் பெருமாளை தரிசிக்கவேண்டும் என்பது விதியாகும்.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், கிருஷ்ணராஜபேட் வட்டத்தில் வராகருக்கு ஒரு கோயில் உள்ளது. மூலவர் பிரளயவராகர் சுகாசனத்தில் அமர்ந்து, இடதுமடியில் பூமாதேவியைத் தாங்கிய வண்ணம், அழகிய கிரீடம், ஆபரணங்கள் தரித்து, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சிதருகிறார். முன்வலக்கரத்தில் அல்லிமலரை ஏந்தியிருக்க, இவரது இடக்கரம் தேவியை அணைத்தபடி உள்ளது. இத்திருமேனி சுமார் 21 அடி உயரமுள்ள சாளக்கிராமக் கல்லினால் ஆனது என்பது தனிச்சிறப்பாகும். இக்கோயில் மைசூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உதயகிரி என்ற தலத்தில் குப்தர் காலத்தில் நிறுவப்பட்ட பூவராகர் சிற்பம் மிக பிரம்மாண்டமானது. மேலும் கஜுராஹோ அருகில் காந்தாய மகா தேவர் கோயில் வளாகத்தில் கருங்கல்லினாலான வராகர் திருவுருவைக் காணலாம். எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த வராகர் மேற்கு வங்காளத்தில் முர்தாபூர் என்ற இடத்தில் கோயில் கொண்டுள்ளார். இதேபோல் ஹரியானா மாநிலம், பராகாகாலன் என்ற இடத்திலும், ஆந்திராவில் நெல்லூரிலும் வராகருக்கு கோயில்கள் அமைந்துள்ளன.
ஒடிஸ்ஸாவின் ஜாஜ்பூர் நகரில் வைதணி நதி இரண்டாகப் பிரிந்து ஓடுகிறது. அங்குள்ள தீவில் ஒரு வராகர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மா இத்தீவில் அஸ்வமேத யாகம் செய்தபோது, வேதங்கள் காணாமல் போய் விட்டன. உடனே பிரம்மா மகாவிஷ்ணுவை வேண்டினார். மகாவிஷ்ணு வராக அவதாரமெடுத்து வேதங்களைக் கண்டுபிடித்து எடுத்து வந்ததாகப் புராணம் கூறுகிறது. அதனால், இத்தீவில் வராகருக்கு கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கோபுரம் சுமார் 22 மீட்டர் உயரம் கொண்டது. முன்மண்டபம், நடுமண்டபம் ஆகியவற்றைக் கடந்து மூலஸ்தானத்திற்குச் சென்றால் இரு வராக விக்கிரகங்கள் உள்ளன. இடப்புறம் லட்சுமியும் வலப்புறம் ஜகந்நாதரும் எழுந்தருளியுள்ளார்கள். ஜகந்நாதர் திருமேனி மரத்தினாலானது.
பொதுவாக, வராக மூர்த்தியை வைணவத் திருக்கோயில்களில் தனிச்சன்னிதியிலோ, சித்திர வடிவிலோ தரிசிக்கலாம். அந்த வகையில் நூற்றெட்டு வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் கோயிலில், தசாவதாரச் சன்னிதியில் தனித்து நிற்கும் வராகரை தரிசிக்கலாம். இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலின் வடக்குப்புறம் ஓடும் கொள்ளிடக்கரைக்கு அருகில் அமைந்துள்ள தசாவதாரக் கோயிலில் வராகர் சுமார் ஆறடி உயரத்தில் காட்சி தருவதை தரிசிக்கலாம்.
வராகமூர்த்தியை வழிபட்டால் பூமி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலன்களை அடைவர். மேலும், சனிதசை, சனி தோஷ சங்கடங்களிலிருந்து விடுபட்டு சுகம் காணலாம். திருமணத்தடைகளை நீக்கும் வல்லமைப் படைத்தவர் வராகர். இவரை தம்பதி சமேதராக வழிபட வாழ்வில் என்றும் சுகம் காணலாம் என்பது நம்பிக்கை.
லட்சுமி வராஹர் காயத்திரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸந்தாநபுத்ராய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
செல்ல வேண்டிய கோவில்கள்:
1. அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்
2. அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்
3.அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
4. அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில்
5. அருள்மிகு லட்சுமி வராஹர் திருக்கோயில்