பதிவு செய்த நாள்
07
மே
2018
12:05
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, வரட்டனப்பள்ளி பாரத கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, வரட்டனப்பள்ளி மேல்தெரு ஆலமரம் அருகில் உள்ள, 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரதகோவிலில், 66ம் ஆண்டு திரவுபதியம்மன், அக்னி வசந்த மகாபாரத விழா கடந்த, ஏப். 20ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில், கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், அர்ச்சுன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்னன் சண்டை, கர்ணன் சண்டை ஆகிய நாடகங்கள் நடந்தன.நேற்று காலை, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனன், பீமன் சண்டையில், துரியோதனன் இறப்பது போல் நாடக குழுவினர் நடித்துக் காண்பித்தனர். இதை, ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.