பதிவு செய்த நாள்
07
மே
2018
05:05
கணவனோடு சேர்ந்து வாழும் பெண்டிர்களை ‘சுமங்கலி’ என்று அழைப்பது வழக்கம். பெண்டிர்களை சுமங்கலி என்று கூற ஒரு மங்கலமான வரலாறு உண்டு. சுமங்கலி எனும் தேவலோகத்துச் சிறுமி தன் தோழிகளோடு வேறு எந்த லோகத்திற்கும் சென்று வர நாரதரைப் போல வரம் பெற்றவள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி விடுதல் அவசியமாகும். தன் தோழிகளோடு பூவுலகில் இமயமலைக்குச் சென்றாள். அங்கு ரிஷி முனிவர்கள் தவம் செய்து கொண்டு இருப்பதைக் கண்டாள். மிகவும் கோர வடிவம் கொண்ட முனிவரைக் கண்டு சுமங்கலி பரிகாசம் செய்தாள். கண் விழித்த ரிஷி முனிவர், சுமங்கலியைக் கண்டதும், “பூவுலகில் வாழக் கடவாய் ” என சாபமிட்டார். சிறுமி சுமங்கலி மீண்டும் தன் தோழிகளோடு தேவலோகம் சென்று விட்டாள். காலம் கடந்தது. சிறுமி சுமங்கலி கன்னிப் பருவம் அடைந்தாள். முனிவரின் சாபத்தை மறந்தாள். தன் தோழிகளோடு பூவுலகில் இந்தியாவின் தென்பகுதியில் திருவெள்ளக்குளம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அங்கு இருந்த குளம் ஒன்றில் குமுதமலர்கள் பூத்து இருந்த ரம்யமான காட்சியை மனம் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தேவலோகம் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. தோழிகள் சுமங்கலியை அழைத்தும் அவள் குமுத மலர்களின் அழகில் மயங்கிக் கிடந்தாள். க்ஷணநேரமே இருந்ததால் தோழிகள் அனைவரும் வேகமாகச் சென்று விட்டனர்.
வெகு நேரம் கழிந்த பின்னர் சுமங்கலி தன்சுய நினைவுக்கு வந்ததும் தோழிகள் அனைவரும் சென்று விட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டாள். இனி என்ன செய்வது, எங்கே போவது என செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள். திருவெள்ளக் குளம் அண்ணன் கோயில் பெருமாளிடம் மிகுந்து பக்தியோடு வாழ்ந்து வருபவர் அவ்வூர் வைத்தியர். பிராமணர்களைப் போல வீட்டில் திருவாராதநம் செய்வார், அவர் மனைவியும் கணவனின் அடியொற்றி வாழ்பவர். குழந்தைகள் இல்லை. பெருமாளை சேவித்து வீடு திரும்புகையில் குமுதமலர் குளக்கரையில் ஊருக்குப் புதியதாக ஒரு பெண் நிற்பதைக் கண்டார். அப்பெண்ணின் கண்களில் மிரட்சியும் பயமும் இருப்பதைக் கண்ட வைத்தியர் அவளை அணுகி “குழந்தாய் நீ யாரம்மா? இங்கு ஏன் நிற்கிறாய்?” என்று கேட்டதும், “ஐயா, நான் குழம்பிய நிலையில் உள்ளேன். என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை... ” என்றாள் சுமங்கலி. “பயப்படாதே குழந்தாய்.... என் வீடு அருகில்தான் உள்ளது. என் மனைவி இருக்கிறாள். என்னுடன் வாம்மா ” என்று பரிவுடன் கூற சுமங்கலி அவரோடு சென்றாள். வீட்டுக்கு வந்த பெண்ணின் அழகைக் கண்டு சொக்கிப் போனாள். வைத்தியரின் மனைவி. தன் பெயரைக்கூட சொல்ல முடியாதபடி குழம்பி நின்றவளை தேற்றி பரிவோடு பேசினாள். குமுதமலர் குளத்தின் அருகில் இருந்ததால் அவளைக் குமுதவல்லி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தாள் வைத்தியரின் மனைவி.
வைத்தியர் குடும்பத்தோடு அண்ணன் பெருமாள் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் சுமங்கலியும் உடன் செல்வாள். ஆனால் வீடு திரும்பும் போது குமுதமலர் குளக்கரையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவாள். வளம் கொழிக்கும் சோழ தேசத்தில் குறையலூர் எனும் குக்கிராமம். வீர மறவர் குடியில் ஆலி நாடன், வல்லி தம்பதியர்க்கு நீலன் பிறந்தான். பிறக்கும் போதே நீல மேக வண்ணனாகப் பிறந்ததால் நீலன் என்று பெயர். நீலன் வாலிப வயதை எட்டியதும் போர்ப் பயிற்சி, வாள் சுழற்றும் பயிற்சி ஆகியவற்றில் மிகுதியான திறமை பெற்றார். இவரின் அபார வாள் வீச்சின் திறமையைக் கண்டு சோழ ராஜா நீலனை பரகாலன் என்று பெயரிட்டுத் தன் போர்ப்படைத் தளபதியாகவும் நியமித்தார். தவிர அவர் ஆளுகைக்கு உட்பட்ட திருமங்கை எனும் ஊருக்கு சிற்றரசனாக்கினார். நீலன் என்று பரகாலன், திருமங்கை மன்னனானார். ஆட்சி பரிபாலனம் போக தன்னுடைய “ஆதன்மா ” என்ற பெயர் கொண்ட குதிரை மீது அமர்ந்து பல இடங்களுக்குச் சென்று கேளிக்கைகளில் ஈடுபட்டார். ஒரு முறை தன் குதிரையின் மீது சவாரி செய்தபடியே குமுதமலர்கள் பூத்துக்குலுங்கும் குளக்கரை வழியே சென்ற சமயம், பேரழகே உருவான குமுதவல்லி அங்கு உட்கார்திருக்கக் கண்டு அவளைப் பற்றி விசாரித்தார். இவர் திருமங்கை மன்னன் எனத் தெரியாமலே தன் வைத்தியர் தந்தை மற்றும் தாயைப் பற்றிக் கூறினாள். விவரம் தெரிந்து கொண்ட மன்னன் வைத்தியரின் வீட்டிற்கே சென்று விட்டார்.
மன்னரே தங்கள் வீட்டுக்கு வந்ததும் அதிர்ந்த வைத்தியர், சேதி அறிந்ததும் மகிழ்ச்சி கொண்டார். அப்போது குமுதவல்லியும் வீட்டினுள் நுழைந்தாள். குமுதவல்லி தன் தந்தை வைத்தியரிடம் “தந்தையே... மன்னர் என் கரம் பிடிக்க விரும்பினால், அவர் ‘பஞ்ச சம்ஸ்காரம் ’ செய்து கொண்டு உங்களைப் போல வைணவராக வாழ வேண்டும். திருமணம் முடிந்த கையோடு ஒரு வருட காலத்திற்கு தினமும் ஆயிரம் அடியார்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும். இதன் பிறகே அவருடன் சேர்ந்து வாழ்வேன்” என்று கூறினாள். குமுதவல்லியின் கரம் பிடிப்பதில் தீவிரமாக இருந்த மன்னன் அத்தனை வேண்டுகோளையும் ஏற்றார். மணம் முடிந்த கையோடு மன்னன் அன்னம் அளிக்க ஏற்பாடு செய்தார். தொய்வில்லாமல் ஒரு வருட காலத்திற்குச் செய்து வந்தார். இன்னமும் மூன்றே நாள்தான். மந்திரி மன்னனுக்குச் சொன்ன சேதி - “மன்னா, அன்னம் அளித்த இந்த ஒரு வருட காலத்தில் கஜானா முற்றிலும் காலி ஆகிவிட்டது. இனி என்ன செய்யட்டும் மன்னரே.... ” அப்போதே மன்னன் ஊர் எல்லைக்குச் சென்று வழிப்பறி செய்து போதிய நிதியைக் கொண்டு வந்து கொடுத்து அன்னம் அளிக்கச் செய்தார். ஆயிரம் பேர் வந்தார்களா என்பதை அறிய ஒரு சேவகன் இருந்தான். அன்று வழக்கம் போல் உள்ளே செல்பவர்களை எண்ணும்போது 999 பேர்கள் மட்டுமே உள்ளே சென்றார்கள். ஆனால் உணவு பரிமாற ஆரம்பித்தாயிற்று. பரிமாறுபவர்கள் ஆயிரம் பேர் வந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஆச்சரியப்பட்ட சேவகன் சாப்பாடு முடிந்து வெளியே வருபவர்களை எண்ணியதில் 999 பேர்களே இருந்தனர். சேவகனும் மன்னனும் குழம்பினர்.
அடுத்த நாளைக்குச் செய்ய வேண்டியதை யோசித்தார். அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றால் வியாபாரிகள் அவ்வழியே பெரும் செல்வத்தோடு வருவார்கள். அதை இரண்டு நாளைக்கு உபயோகிக்கலாம் என்று எண்ணியவர் அதன்படி காட்டுக்குள்ளே சென்றார். பகவான் மன்னனை ஆட்கொள்ள வேண்டிய சமயம் வந்தாயிற்று. பகவானும் மஹாலக்ஷ்மியும் ‘திருமணக் கோலத்தில் ’ மன்னன் இருக்குமிடம் சென்றனர். செல்வந்தர்கள் வரும்வரை மன்னன் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கல்யாண கோலத்தில் அபிரிமிதமான ஆபரணங்களுடன் வரும் தம்பதிகளைக் கண்டு மன்னன் மகிழ்ந்தான். தன் வாளை நீட்டி மிரட்டி நகைகள் அத்தனையையும் கொடுத்து விடும்படி அதட்டினான். இத்தனை நாள் செய்த செலவுகள் அத்தனையையும் இந்த நகைகள் மூலம் மீட்டு கஜானாவை நிரப்பிவிடலாம் என்று யோசித்தான் மன்னன். தம்பதிகள் அத்தனை நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர். பகவானின் கால்களில் இருந்த மெட்டியையும் கழற்றிச் சொன்னான் மன்னன். “அப்பனே என்னால் கழற்ற முடியவில்லை. நீயே கழற்றிக் கொள் ” என்றார் பகவான்.... மன்னன் கீழே குனிந்து பகவானின் திருவடியில் தலை வைத்து, தன் பல்லால் மெட்டியைக் கடித்து இழுக்கும் சமயம் மன்னனின் உடல் நடுங்கியது. வந்திருப்பவன் மாயக்காரன் போல் தோன்றுகிறது. இந்த மெட்டியைக் கழற்ற முடியவில்லை. போனால் போகட்டும் என்று மற்ற நகைகளை மூட்டை கட்டித் தூக்க முயன்று தோல்வி அடைந்தான்.
மன்னன் பகவானைப் பார்த்து, “ஏய் மாயக்காரா.... உன் மந்திர தந்திரங்களை உன்னோடு வைத்துக்கொள். இம் மூட்டையைத் தூக்க வேண்டிய மந்திரத்தைச் சொல்கிறாயா அல்லது இந்த வாளுக்கு இரையாகப் போகிறாயா ” என்று மிரட்டினான். பகவான், “என் கலியனே, பரகாலனே, திருமங்கை மன்னனே ” என்று பரிவோடு கூறியதும் மன்னன் அதிர்ந்தான். தன்னை எப்படி இவன் அடையாளம் கண்டு கொண்டான்... என்று வியந்தான். அப்போது பகவான், “என்னிடம் அருகில் வந்தால் மந்திரத்தைச் சொல்லுவேன். அப்போது உன்னிடம் உள்ள மூட்டையை இலகுவாகத் தூக்கலாம்” என்றார். மன்னன் அருகில் சென்றான். அங்கு இருந்த அரச மரத்தடியில் பகவான் மன்னனின் காதில் திருவெட்டு எழுத்து மந்திரத்தைக் கூற... மன்னன் மேனி சிலிர்த்து நிமிர்ந்து நோக்கினான். சங்கு சக்ரதாரியாக எம்பெருமான் மஹாலட்சுமி சமேதராகக் காட்சி அளித்தார். அது சமயம் பகவானின் சங்கல்பத்தினால் வைத்தியரும் அவரது மனைவியும் குமுதவல்லியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். பகவான் திருவாய் மலர்ந்து அருளினார்... ” என் கலியனே. நீ என்னுடைய சார்ங்கம் எனும் வில்லின் அம்சம். கேளிக்கைகளிலேயே உன் வாழ்நாள் கழிந்தது. சுமங்கலி எனும் தேவ கன்னிகையே குமுதவல்லி. உன்னை வைணவனாக்கி அடியார்களுக்கு உணவிடச் செய்து உன்னைக் கரை ஏற்றிய திருமங்கை. நேற்றைய தினம் உன் அடியார்களோடு யாமும் உணவுண்டோம்.
கலியனே... திருமங்கை ஊரை ஆண்டதால் திருமங்கை மன்னன் என்று அழைக்கப்பட்டாய். ஆனால் உன்னை கரம் பிடித்த திருமங்கையால் நீ உய்வு பெற்றாய். எனவே நீ திருமங்கை ஆழ்வார் என்று அழைக்கப்படுவாய். நீ என்றும் எப்போதும் இந்தத் திருமங்கையோடு சேர்ந்தே இருக்க வேண்டும். கணவனோடு சேர்ந்து வாழும் பெண்டிர்களை இனி சுமங்கலி என்று அழைப்பார்கள். சுமங்கலிகளுக்கு வஸ்த்ரம், புஷ்பம், குங்குமம் எனக் கொடுத்தால் குமுதவல்லித் தாயாரின் அநுக்ரஹம் பெறுவர்” எனக் கூறி ஆழ்வாரையும் குமுதவல்லி, வைத்தியர் அவர் மனைவி அனைவரையும் தன் பேரருளால் கடாக்ஷித்தார். வைணவக் கோயில்களில் உள்ள திருமங்கை ஆழ்வார் சன்னதிக்குச் சென்றால் குமுதவல்லித் தாயாரோடு தான் தரிசனம் அளிப்பார். மன்னனாக இருந்ததால் கையில் வேலும் இருக்கும். திருமங்கை ஆழ்வார் சமேத குமுதவல்லித் தாயாரைக் குடும்பத்தோடு வணங்கித் தொழுதல் இல்லம் இனிக்கும்.