பதிவு செய்த நாள்
10
மே
2018
12:05
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் மக்களிடையே பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு சொந்தமான, 27 அடி உயரமுள்ள தேர் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது.இந்தாண்டு, தேர்த்திருவிழாவுக்கு கடந்த, 7ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. சந்தேகவுண்டன்பாளையத்தில் இருந்து மேளதாள ஊர்வலத்துடன், தயிர் குடம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு நேற்று முன்தினம் அபிேஷகம் செய்யப்பட்டது. சென்னியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட, வேல் எடுத்து வரப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. இரவு, 8.00 மணிக்கு, திருவிழா குறித்து ஊர்மக்களுக்கு அறிவிக்கும் பூச்சாட்டுதல் நிகழ்வு நடந்தது. இந்த அறிவிப்பு கோவிலுக்கு உட்பட்ட, 32 கிராமங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.வரும், 14ம் தேதி இரவு கிராம சாந்தியும், வாஸ்து சாந்தியும் நடக்கிறது. 15ம் தேதி கம்பம் நடுதலும், பூவோடு எடுக்கும் நிகழ்வும் நடக்கிறது. வரும், 24ம் தேதி தேரோட்டம் துவங்கி, மூன்று நாட்கள் தேரோட்ட வீதியில் வலம் வருகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.