பதிவு செய்த நாள்
10
மே
2018
02:05
திருப்பூர்: அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டதால், திருப்பூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், தாராபாத்திரம் வைத்து, சிவலிங்கம் குளிர்விக்கப்படுகிறது. தமிழ் வருட பிறப்பை தொடர்ந்து, சித்திரை மாதத்தின் மூன்றாவது வாரம் துவங்கி, வைகாசி இரண்டாவது வாரம் வரை அக்னி நட்சத்திரத்தில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆன்மிகத்தில், சிவபெருமான் அக்னியின் அம்சமாக கருதப்படுவதால், அக்னி நட்சத்திர காலத்தில், சிவலிங்கம் அதிகளவு வெப்பமடைகிறது என்பது, ஐதீகம். அதன்படி, சிவலிங்கத்தை குளிர்விக்கும் வகையில், மூலவராக உள்ள சிவலிங்கம், நாள் முழுக்க குளிர்விக்கப்படும்.இதுகுறித்து, சிவாச்சாரியார்கள் கூறியதாவது; தாராபாத்திரம் எனும், கூம்பு வடிவ செம்பு பாத்திரத்தை, கருவறையில், சிவலிங்கத்துக்கு மேல் பொருத்தி, வாசனை திரவியம், வெட்டிவேர், தண்ணீர் ஊற்றுகிறோம். நிமிடத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீதம், லிங்கத்தின் மீது விழும் வகையில், தாராபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான அபிேஷக, அலங்கார பூஜைகளை தொடர்ந்து, நாள் முழு வதும் லிங்கம் குளிர் விக்கப்படும்.பகலில் வெயிலின் உக்கிரம் அதிகம் என்பதால், மாலை நடை திறந்ததும், மூலவருக்கு பாலாபிேஷகம் செய்யப்படும். வரும், 27ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருப்பதால், அதுவரை, இதுபோன்ற வழிபாடு தொடரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.