பதிவு செய்த நாள்
19
மே
2018
01:05
ஓசூர்: கெலமங்கலம், பட்டாளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெங்களூரு பகுதியில் இருந்து தேர் கொண்டு வரப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் பட்டாளம்மன் கோவில் உள்ளது. தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். கடந்த, 2008ல் கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கியதால், 2016 வரை திருவிழா மற்றும் தேரோட்டம் நடக்கவில்லை. ஒன்பது ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு, மீண்டும் தேரோட்டம், திருவிழா நடந்தது. இக்கோவிலுக்கு சொந்தமான தேர், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள தர்மராயர் சுவாமி கோவிலில் இருந்து, தேர் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு கிராம மக்கள் தேரோட்டம் நடத்தினர். இந்தாண்டு தேர்த்திருவிழா வரும், 21ல் துவங்கி, 23 வரை நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமாக தேர் தயார் செய்யும் பணி, முடியாததால், பெங்களூரு அடுத்த தொட்டநாக மங்கலம் பகுதியில் உள்ள மத்தூரம்மா கோவிலில் இருந்து, தேர் கொண்டு வரப்பட்டு, வரும், 22ல் நடக்கும் தேரோட்டத்திற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன், 23 ல் நடக்கும் பல்லக்கு உற்சவம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும், ஒன்பது கிராம மக்கள் செய்து வருகின்றனர்.