பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
11:07
விருதுநகர்: கோயிலில் மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்திற்காக மண் அகல் விளக்கிற்கு தடை விதித்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவலிங்காபுரம், எஸ்.தோப்பூர், அருப்புக்கோட்டை, கூமாப்பட்டி, கான்சாபுரம், சேத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், அனுப்பங்குளம், தம்பிப்பட்டி, கோபாலபுரம், மீனாட்சிபுரம் பகுதிகளில் அகல் விளக்கு செய்யும் தொழில் அதிகளவில் உள்ளது. இவர்கள் பரம்பரை, பரம்பரையாக இத்தொழில் செய்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மண் அகல் விளக்கு தீபம் ஏற்றக் கூடாது என உத்தரவு போடப்பட்டது. இத்தொழில் செய்யும் தொழிலாளர்கள் உத்தரவை ரத்து செய்து தொழிலை காப்பாற்ற விருதுநகர் கலெக்டர் சிவஞானத்திடம் முறையிட்டுள்ளனர்.
பிழைப்பின்றி தவிக்கிறோம்: தமிழகத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண் அகல் விளக்கு போன்ற மண்பாண்ட பொருட்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து மின்கசிவின் காரணமாக ஏற்பட்டது. ஆனால் மண் அகல் விளக்கு தீபம் ஏற்ற தடை போட்டு விட்டார்கள். இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பிழைப்பின்றி தவிக்கிறார்கள். -சுப்பையா, தலைவர்,மதுரை மண்டல மண்பாண்ட தொழிலாளர்கள் நல சங்கம்.