பதிவு செய்த நாள்
24
ஜூலை
2018
01:07
மாமல்லபுரம்: கோவில் செயல் அலுவலர்கள், ஒரு நாளில், எட்டு மணி நேரம் பணி புரியவும், சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கவும் வலியுறுத்தி, சங்க கூட்டத்தில் தீர்மானம் இயற்றினர். தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க, சென்னை, விழுப்புரம், வேலுார் ஆகிய மண்டல, செயல் அலுவலர்கள் கூட்டம், மாமல்லபுரத்தில் நடந்தது. மண்டல பொறுப்பாளர் க.நாகராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் ஜி.சம்பத்குமார், க.அருட்செல்வன் மற்றும் பல்வேறு பகுதி கோவில் செயல் அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்: செயல் அலுவலர்களை, தக்காராக நியமிக்கக் கூடாது. தக்கார் பணியிட, முந்தைய நியமனத்தை ரத்து செய்து, சரக ஆய்வரை தக்காராக நியமிக்க வேண்டும். அனைத்துக் கோவில்களுக்கும், அறங்காவலர்களை உடனே நியமிக்க வேண்டும். துறைப் பிரிவுகள், கணினிமயமானாலும், படிவங்களை உடனே அளிக்க வலியுறுத்துவதை தவிர்த்து, அறிக்கை அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். கோவில்களின் காலி பணியிடங்களை, உடன் நியமிக்க வேண்டும். அலுவலக நேரம், காலை, 10:00 - மாலை, 6:00 மணி; சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் விடுமுறை அவசியம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.