பதிவு செய்த நாள்
03
ஆக
2018
12:08
அம்மன் அலங்காரம் செய்யும் தொழிலுக்கு, கூலி உயர்ந்துள்ளது என, அத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். கிராமம் மற்றும் நகரங்களில், ஆடி மற்றும் ஆவணி ஆகிய மாதங்களில், அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கும். இத்திருவிழாக்களில், அம்மனுக்கு பல விதங்களில், அலங்காரங்கள் செய்வர். இதில், இரண்டு கை முதல், 32 கைகள் உடைய விஸ்வ ரூப தரிசன அலங்காரமும் செய்யப்படுகிறது. ஒவ்வொரு அலங்காரத்திற்கு, 4,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். நடப்பாண்டு, அனைத்து விதமான அம்மன் அலங்காரத்திற்கும், 1,000 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையில், கூலி உயர்த்தப்பட்டுள்ளது என, தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, அம்மன் அலங்காரம் செய்யும், தட்சிணாமூர்த்தி கூறியதாவது: அம்மன் அலங்காரத்திற்கு தேவையான நகை மற்றும் பிற ஒளிரும் அலங்கார பொருட்களின் விலை உயர்வால், அலங்கார கூலி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.