பதிவு செய்த நாள்
03
செப்
2018
12:09
மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஆவணி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சுவாமிக்கு பால் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகா அபிேஷகம் நடந்தது.
பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் அலகுகள் குத்திக் கொண்டும், கோவில் வளாகத்தில் அங்கபிரதட்சனம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு வெள்ளித்தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணியர் சுவாமி மலை வலம் வந்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.
திருக்கோவிலுார்: வீரட்டானேஸ்வரர் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து சுவாமி கோவில் உள்புறப்பாடு நடந்தது.