பதிவு செய்த நாள்
03
செப்
2018
12:09
சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில், உறியடி உற்சவத்துடன், விழா களைகட்டியது.
தரிசனம்: ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ண ஜெயந்தியாக, இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.சிலர் நட்சத்திரம், திதி பார்த்து கொண்டாடுவதால், இந்தாண்டு, கிருஷ்ண ஜெயந்தி விழாவை, பெரும்பாலானோர் நேற்று கொண்டாடினர்; சிலர், இன்று கொண்டாடுகின்றனர். சென்னை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் நேற்று, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக நடந்தது. சென்னை சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள, இஸ்கான் கோவிலில், இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அங்கு கிருஷ்ண யாகம், அபிஷேகம், தரிசனம் நடந்தது.
வழிபாடு: கோபாலபுரத்தில் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோவில்; கவுடியா மடம்; மயிலாப்பூர் நந்தலாலா; கோட்டூர்புரம், சாஸ்திரி நகர் கிருஷ்ணர் கோவில்களில், சிறப்பு அபிஷேக, ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன.இன்று, அமிர்தம் கடைதல், குசேலர் வைபவம், உறியடி உற்சவம் நடக்கிறது. பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடக்கிறது. சென்னை நகரில், பல வீடுகளில் வீதி முதல், பூஜை அறை வரை, கிருஷ்ணர் கால் பாதம் வைத்து அலங்கரித்தனர்.நாவல் உள்ளிட்ட கனி வகை, சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணெய், பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றை கிருஷ்ணருக்கு படைத்து, வழிபாடு செய்தனர்.