பதிவு செய்த நாள்
25
செப்
2018
03:09
1. பாண்டிய மன்னர் காலங்களில் பங்குனி உத்திர நாளில் அம்மையப்பர் இருவரும் மதுரையின் கிழக்கில் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பூவனம் இன்றைய திருப்புவனம் - திருபுவனம் சென்று திரும்பியுள்ளனர். பின்னர் திருமலை மன்னரும் அதைத் தொடர்ந்து பின்பற்றினார் எனினும் வைகை இருகரையும் அவ்விழா காலத்து வெள்ளப் பெருக்கேற்பட்டு சிரமப்பட நேர்ந்ததாலும், சொக்கர் வேறெங்கும் இராத்தங்குதல் கூடாது என முடிவு செய்து, அம்முறையை மாற்றித் திருப்புவனம் செல்லாது மதுரை வைகை வடகரையைக் கடந்து திருவாப்புடையார் கோவிலுக்குச் சென்று வரும் முறை வழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பு : இச்செய்தியின் மையக் கருத்தை முழுதும் எழுதினால் விரியும் என எண்ணி சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
2. அம்மையப்பர் பிறக்கோயில் தலங்களுக்குச் செல்கையில் அவர்கள் பூஜைகளுக்கு வேண்டிய பூக்கள், மாலைகள், அபிஷேகப் பொருட்கள், திருமஞ்சனம் மற்றும் நிவேதனப் பொருட்கள் வரை தங்கள் இருப்பிடத்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உடன் எடுத்துச் செல்வது வழக்கம். இஃது இன்றளவிலும் வழக்கத்தில் உள்ளது.
மதுரைத் திருவிழாக்களின் சில வகைகளும் அதன் சுருக்கமும்
1. அம்மைக்கும், அப்பருக்கும், காலை மாலை நடத்தப்படும் விழாக்களுக்கு முன் கொடியேற்றித் துவக்கும் விழாக்கள் - ஐந்து
2. அம்மைக்கு மட்டும் கொடியேற்றி காலை - மாலை நடத்தப்படும் விழா - ஒன்று
3. கொடியேற்றாமல் ரக்ஷா பந்தனம் காப்புக் கட்டி மாலை மட்டும் நடத்தப்படும் விழாக்கள் அம்மைக்கும் அப்பனுக்கும் சேர்த்து - மூன்று. நடைபெறும் மாதங்கள் : வைகாசி, ஆனி, பங்குனி.
4. அம்மைக்கு மட்டும் தனி விழா எடுப்பது - மூன்று. அவைகள் நிகழும் மாதங்கள் : புரட்டாசி, ஐப்பசி, மார்கழி
5. சந்திரசேகரர் உலாவுடன் நடக்கும் விழா - ஒன்று. ஐப்பசி மாதத்தில் நடைபெறும் பவித்ரோற்சவம்
6. நடராஜர்கள் வீதி உலா விழாக்கள்: இரண்டு 1. ஆனிமாத உத்திர நட்சத்திரத்தன்றும்
2. மார்கழி மாத திருவாதிரை நாளன்றும்.
7. நாயன்மார்கள் அறுபத்து மூவரின் திருஉலாவும், அவர்கள் சரிதம் கூறும் பாடல்களைப் பாடி நடைபெறும் விழாக்கள் : ஒவ்வொரு நாயன்மாரும் உதித்த திருநட்சத்திரம் வரும் நாளன்று நிகழ்வதாகும்.
திருவீதி உலாக்கள் நிகழும் மாதங்களும் - வீதிகளும்
1. சித்திரை மாதம் : மாசி வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்
2. வைகாசி மாதம் : சித்திரை வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்.
3. ஆடி மாதம் : ஆடி வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்.
4. ஆவணி மாதம் : ஆவணி மூல வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்.
5. ஐப்பசி மாதம் : ஆடி வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்
6. கார்த்திகை மாதம் : ஆடி வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்
7. மார்கழி மாதம் : சித்திரை வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்.
8. தை மாதம் : சித்திரை வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்
9. மாசி மாதம் : சித்திரை வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்
10. பங்குனி மாதம் : சித்திரை வீதிகளில் இறையனார் திருஉலா வருவார்.
11. மார்கழி மாதம் : வெளி வீதிகளிலும், மாரட் வீதிகளிலும் அஷ்டமி பிரதக்ஷிண விழா
12. ஆனி மாதம் : திருமஞ்சன விழாவிலும், மார்கழி மாதம் திருவாதிரை நாளிலும் ஐந்து நடராஜ மூர்த்திகளும் புறப்பாடு நடைபெறும்.
2. மாசி மண்டலத் திருவிழா காலத்தில் விநாயகர், முருகன், சந்திர சேகரர், நந்திகேஸ்வரர், சண்டேஸ்வரர் ஆகியோர்க்கும் விழா அமைத்துள்ளார்கள். சந்திர சேகரர்க்கும் முருகப்பெருமானுக் கும் ஒவ்வொரு கார்த்திகை தோறும் விழாவாகும்.
3. வாரந்தோறும் வெள்ளிக் கிழமையில் அம்மையப்பர் சுவர்ண விக்ரஹ மூர்த்திகள் ஊஞ்சல் மண்டபத்தில் விழா நடைபெறுகிறது.
4. தினந்தோறும் திருக்கோயிலுக்குள்ளேயே சுவாமி புறப்பாடு நிகழும்.
(3) நால்வர் விழாக்கள்
1. அப்பர் சுவாமிகளுக்கு : சித்திரை மாதத்தில் சதய நட்சத்திரத்திலும்
2. சுந்தரர், சேராமான் பெருமானுக்கு : ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளிலும்
3. மாணிக்க வாசகப்பெருமானுக்கு : ஆனி மாத மக நட்சத்திர நாளிலும், மார்கழி மாதத்திலும் திருவெம்பாவை நாட்களிலும்
4. திருஞான சம்பந்தர் பெருமானுக்கு : வைகாசி மாதத்தில் மூன்று நாட்களும், அதே மாதம் மூல நட்சத்திரத்தன்று 63 நாயன்மார்களுடன் சேர்ந்து காலையில் சிவிகையிலும், இரவில் வெள்ளி கோ ரதத்திலும் உலா வருதலும் இவ்வாறு நால்வருடன் சேரமான் பெருமானுக்கும் 63 நாயன்களுக்கும் சேர்த்தும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
(4) அடியார் விழாக்கள்
63 நாயன்மார்களுக்கும் அவரவர் ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருஉலா வரும் விழாவெனக் கொண்டாடி வருகின்றனர்.
சிவனடியார் திருத்தொண்ட நாயனாரைச் சோதிக்கும் விதமாக பிள்ளைக் கறி சமைக்க வைத்து ஆட்கொண்ட சிவபிரான் பைரவர் வேடம் பூண்டு நிகழ்த்திய வரலாற்றினை ""பைரவ நாடகம் என்று சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பரணி நட்சத்திர நாளில் கொண்டாடப்பெறும் விழாவும் ஒன்றாகும்.
பெண் காவல் தெய்வங்களை வழிபடும் விழாவென மாரியம்மனுக்கும், செல்லத்தம்மனுக்கும், சித்திரை மாதத்திலும் தை மாதத்திலும் கொண்டாடப்படுகிறது.
(5) தேரோட்ட விழா
சித்திரை மாதம்: நான்கு மாசி வீதிகளில் தேரோடும். ஆடி மாதத்தில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மைக்கு சித்திரை வீதிகளில் தேரோடும். ஆவணி மாதத்தில் ஆவணி மூல வீதிகளில் தேரோடும். மாசி மாதத்தில் சித்திரை வீதிகளில் தேரோடும். கார்த்திகை மாதத்திலும், தை மாதத்திலும் - ஆடி வீதிகளில், சித்திரை வீதிகளில் தேர் பவனி வரும்.
விழா பற்றிய நிறைவுச் செய்தி
யாவற்று சுயம்பு லிங்கத் தோற்றங்கட்கும் முந்தித் தோன்றி மூல லிங்க நாதர் திருவாலவாயனின் மதுரையிற்பிறந்தாரும். வாழ்ந்தாரும் மறைந்தாரும் முத்திப்பேறு தானாய் வந்தமையும் முத்தித் திருத்தலத்து அப்பரம்பொருள் பரமேசனின் திருச்சடையினின்றும் வழிந்து வெளிப்போந்த அமுதத் திரு சிவகங்கையிற் தீர்த்தப் பெருமையும், இவ்வாறே முப்பெருமையும் ஒருசேரக் குவிந்த ஸ்ரீ மீனாக்ஷி சோம சுந்தரரின் திருக்கோவில் திருவிழாக்களைக் காண மானுடர் ரிஷிகள் மட்டுமல்லாது புத்தோளில் வாசம் செய் தேவர் தலைவன் இந்திரன் முதல், சுரர் அசுரர் என அத்துணை பேரும் தரிசித்து வணங்கிச் செல்லும் பெருமைக்குரியதாகும். எம்பெருமானார், அவ்வதிர வீசி ஆடும் ஆடவல்லான் கால்மாற்றி ஆடிய நடராஜ மூர்த்தி கஜசம்ஹார வாஹனத்தில் எழுந்தருளும் காட்சி எத்தனை மகத்தானது. ஒரே சமயத்தில் இருமாதங்களில் மூவருக்குள் முதன்மையான நான்மறைகளின் தத்துவப் பொருளானவன் ஐந்து சபைக்கரசனாய், பஞ்ச நடராஜ மூர்த்திகளாய் உலாவரும் உற்சவத்தை வேறெங்கு கண்டு மகிழ முடியும்!
சகள, நிஷ்கள, சகள நிஷ்கள அரு - உரு - அருவுரு என ஆகமங்களின் விளக்கம். தத்துவம் - மூர்த்தி - பிரபாவம் என மூன்று வகைகளில் ஒரே சிவ வடிவாய், ஒருவகைத் தோற்றத்து இருமறபெய்தி சக்தி சிவமென, இயங்கு - இயக்க வடிவாகியும், நிற்பவராகிறார்கள். அன்னை பராசக்தியோடு என்றும் பிரியாச் சேர்க்கை ஐக்கியபந்தம் நிலையெனப் பிரியாவிடையுடனும் அம்ஸபந்த மென அன்மை ஸ்ரீ மீனாக்ஷி தடாதகைப்பிராட்டி யோடும், மட்டும் இருக்கிறார்.
ஆறுமுகனோடு, ஆனைமுகனோடு, அறுபத்துமூன்று நாயன்மார்களோடு எப்போதும் காட்சிகள் தந்த வண்ணமாயிருக்கின்றார்களே! இப்படி அற்புதத்தை நல்கும் நிலை, நிலவுலகில் வேறெங்கு நிகழ முடியும்! பூப்பல்லக்கு, முத்துப் பல்லக்கெனவும், சிறுதேர்-சட்டத்தேர் சப்பரங்களெனவும், ""நீர்த்தேர் என நீரிலும் பவனி வருதற்கென அலங்காரத் தெப்பத்தேரும், வகை வகையாய் பொன்-வெள்ளியால் இழைத்து வடிவமைக்கப்பட்ட அழகுமிளிர் கண்கவர் பலப்பல வாஹனங்களும் இவர் இருவருக்கும் எத்தனை இருக்கின்றன!
குதிரை, யானை, யாழி பூதம், நந்தி தேவர், கற்பக மரம், அன்னம், காமதேனு, ரிஷபம் எனப்பலப்பல அழகு மிளிரும் தங்கம், வெள்ளியிலான வாகனங்களில் எழுந்தருளும்போதெல்லாம் கிடைத்தற்கரிய விலைமதிப்பற்ற முத்தும் பவளமும், நவ ரத்தினங்களும் சொக்கத் தங்கமும் பெருவாரியாகக் கலந்து வார்த்தாற்போல் வகை வகையாய் இழைத்துச் செய்த திருவாபரணங்களை அணிந்து கொண்டு வரும் ஆபரணங்கள் பற்றி திருக்கோவில் திருவாபரணங்களில் காண்க.
"அணிந்து கொண்டு அணிக்கு அணி செய்தார்ப் போல் அழகொளிர நின்ற ஓவியமே எனப் பிள்ளைத் தமிழ் பாடிய குமரகுருபரர் கூற்றென வலம் வரும் திருக்கோலர் திருவருட்க் கோலத்தை கண்டுகளிக்கும் அக்கண்களுக்கன்றோ அதன்பெருமை தெரியும். தன் மீது உலா வர அவ்வாடி வீதிகளும் ஆவணி வீதிகளும் சித்திரை வீதிகளும் மாசி வீதிகளும், வெளி வீதிகளும் என்ன புண்ணியம் செய்திருக்கின்றன. திருவாலவாயப்பனே! அம்மையே! நீவிர் இருவரும் எந்நாட்டவருக்கும் சொந்தமென சொல்கையில் பெருமையாகத்தான் இருக்கிறது. எனினும் கொஞ்சம் பொறாமையும் வருகிறதே. நீவிர் எமக்கு மட்டுமே சொந்தமாய் இருக்க வேண்டுமென ஒரு குழந்தையைப் போல் எண்ணம் கொள்ளும் எம்மைப் பரிகசிக்காதீர்கள். விழாமலி மூதூரே! ஏ! மதுரையூரே! மதுரை அமுதே! உன் மடியில் நாங்கள் என்றென்றும் பிறக்க, தவழ, வாழ, மறைய எண்ண தவம் செய்தோம். எத்தனை பிறவிகள் எடுப்பினும் இம்மதுரை மண்ணிலயே மீண்டும் மீண்டும் பிறக்க அருள் செய்வீரே! அடி பணிந்தோற்றுவோம்! யாம்
திருச்சிற்றம்பலம்