பதிவு செய்த நாள்
05
அக்
2018
10:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, குரு பரிகார தலமான வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. தஞ்சாவூர் அருகே திட்டையில், குரு பரிகார தலமான வசிஷ்டேஸ்வரர் கோவிலில், தனி சன்னதியில், குரு பகவான், ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார்.
குரு பகவான், துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு, நேற்று இரவு, 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார்.விழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. குரு பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள், சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அரசு சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக, இக்கோவிலில், வரும், 10ம் தேதி லட்சார்ச்சனை நடக்க உள்ளது. 12 - 15ம் தேதி வரை தொடர்ந்து, பரிகார ஹோமங்களும் நடக்க உள்ளன.