திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டத்தில் செண்பகராமன் நல்லூர் என்று ஒரு சிற்றூர் இருக்கிறது. இங்கு ஒரு சிறிய பெருமாள் கோவில் உண்டு. இதன் சிற்பச் சிறப்பு மிகவும் அருமையானது, போற்றுதற்குரியது. இக்கோயிலில் உள்ள கருங்கல்தூணில் குடைந்துள்ள ஒரு இசைக்குழல் அதிசயமான ஒரு சீரிய சிற்பப்படையாக சிறந்து இலங்குகிறது. இத்தூண் குழல் கோயில் திருவறையின் தென்மேற்கு மூலையில் இருக்கிறது. இத்தூணில் குடைந்திருக்கும் துவாரம் அடிபெருத்தும் நுனிசிறுத்தும் நடுப்பாகத்தில் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது. இதனால் இக்குழல்கள் நின்று கொண்டு எளிதில் ஊத முடிகிறது.
ஆழ்வார் திருநகரியில் உள்ள தூணில் குடையப்பட்டிருக்கும் குழல் துவாரம் அடியிலிருப்பதால் எவரும் அதை நின்று கொண்டு ஊத முடியாது. தரையில் படுத்துக் கொண்டுதான் ஊத முடியும். அதோடு அக்குழலின் உட்பாகத்தை உற்றுப்பார்க்கவும் முடியாது. ஆனால் செண்பகராமன் நல்லூர் குழலின் உட்பாகத்தில் மின் விளக்கில் ஒளியைப் பாய்ச்சி நன்றாக பார்க்க முடிகிறது. இத்தூண் குழல்துவாரம் கீழிருந்து மேல்நோக்கும் வண்ணம் சற்று சாய்வாகக் குடையப்பட்டிருக்கிறது. குழலின் உட்பக்கம் மென்மையாகவும் பளபளப்பாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. ஒரு பக்கத்தில் இந்த வட்டவடிவமான துவாரத்தின் குறுக்களவு முக்கால் அங்குலம். மற்றொரு பக்கத்தில் ஒரு அங்குலம் குறுக்களவும் இருக்கிறது.
குழலின் இருநுனிகளும் வட்டவடிவமாக இருக்கின்றன. இத்தூணில் ஒருபக்கம் ஊதினால் சங்கொலியும் மற்றொரு பக்கம் ஊதினால் எக்காள ஒலியும் பொங்கி எழுகிறது. இது இந்தியாவிலேயே அரிய அற்புதமான ஒரு உற்பவமாகும். இத்தூண் குழலின் நீளம் ஒரு அடியாகும். தூணில் இக்குழல் கீழ்மேலாக அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழலின் ஒருபக்கம் நின்று ஊதும்பொழுது பலவிதமான சுர ஒலிகளை ஒலிப்பதற்கு உகந்த வண்ணம் உருவாக்கப் பட்டிருக்கிறது என்று கருதப்படுகிறது. ஒத்துணர்வு ஓசை உடைய இரு நுனிகளில் இருந்து ஊதும்பொழுது பலவிதமான சுரங்கள் பிறக்கின்றன. இருநுனியிலும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் அதன் விளைவு மிகப்பிரமாதமாக இருக்கிறது. இந்த அற்புதமான தூண்கள் ஆழ்வார் திருநகரி செண்பகராமன் நல்லூர் ஆகிய இரு ஊர்களைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வரிய சிற்பக் கருவூலங்களைப் படைத்த பழம்பெரும் பாண்டியநாட்டுச் சிற்பிகளின் பெருமை இன்று மட்டுமல்ல பல்லாயிரம் ஆண்டுகள் வரை பாரத நாடு மட்டுமல்ல. பார் முழுவதும் ஏற்றிப் போற்றுதலுக்குரியது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »