திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில் தான் மாநிலம் போற்றும் பாண்டியப் பண்ணிசைக்கும் தூண்கள் கெம்பீரமாக உயர்ந்து எழிலுடன் நிற்கின்றன. இங்கு கொல்லம் 721 ம் ஆண்டில் ""ஜெய துங்க நாட்டை வென்று மண் கொண்ட பூதள வீரசங்கிலி வீர மார்த்த வர்மன் திருப்பணியாக 64 கால்கள் கொண்டதாய் முன்பக்கம் இரு இசைத்தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தூண்கள் மண்டபத்தையும் இக்கோயிலையும் அணி செய்பவை. இந்த இசைத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே பெருங்கல்லால் செய்யப்பட்டவையாகும். நடுவில் பெரிதாய் ஒரு தூணும் அதைச் சுற்றிலும் உருவிலும் திருவிலும் உயரத்திலும் வித்தியாசமான 48 சின்னஞ்சிறு தூண்களான உருட்டுக்கம்பிகளும் இணைக்கப்பட்டாற் போன்று செதுக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் முன்பக்கம் இவ்விதமான பண்ணிசைக்கும் இருதூண்கள் பாடிய மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த அற்புதமான அழகிய இசைத்தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிறிய உருட்டிலும் ஒரு சிறிய குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு சுரம் எழுமாறு இத்தூண்களை அமைத்திருப்பது வியப்பையும் மகிழ்ச்சியையும் எழுப்புகிறது. இம்மண்டபத்தை அமைத்தவன் கி.பி 7ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சிய கூன்பாண்டியன் என்று இவ்வூர் தல புராணம் கூறுகிறது. இம்மணிமண்டபத்தை அலங்கரிக்கும்இரு இசைத்தூண்களும் ஆழ்வார் திருநகரி இசைத் தூண்களை விட அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றன. இதே போன்று இரு இசைத் தூண்கள் அம்பாள் சன்னதியிலும் உள்ளன. இவைகள் நான்கும் சிறந்த இசைத்தூண்களாய் அற்புத நாதத்தை அள்ளிச் சொரிகின்றன. தூணில் உள்ள சிறு உருட்டுக்கம்பிகளில் வெவ்வேறு சுரம் எழுவதற்கு நமது சிற்பிகள் கையாண்டிருக்கும் முறை எவரும் காண முடியாத ஒரு அலாதியான அரிய முறையாகும்.
உருட்டுக்கம்பிகள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய அணில் ஏறிப்பாய்வது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தூணில் இருக்கும் அணிலை அடுத்த தூணில் இருக்கும் அணில் எட்டிப்பிடிக்க முயல்வது போல் இருக்கும். இது தொடர்பைக் காட்டச் சிற்பிகள் கையாண்டிருக்கும் அரும்பெரும் குழூக்குறியாகும். என்னே! இந்தப் பாண்டிய நாட்டுச்சிற்பிகள் கண்ட கல்லை கனிவிக்கும் கவினுறும் கை வண்ணம்!! இத்தூண்கள் ஏனைய தூண்களைப் போன்ற மேற்கூரையை மட்டும் தாங்கி நிற்கும் தூணாக நிற்கவில்லை. ஏழுஸ்வரங்களில் எழுப்பும் பண்ணிசைக்கும் பாட்டுத்தூண்களாக மட்டும் இலங்கவில்லை. எழில் மிக்க சிற்பச் செல்வங்களை உடைய சீரிய தூண்களாகவும் மிளிர்கின்றன. இது நல்ல அகலமும் உயரமும் உள்ளதாய் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் காணப்படும் பதும பந்தம், கலசம், தாடி, குடம், இதழ்முனை, பலகை, கண்டம், போதிகை, அதில் உள்ள மதனை, பூமுனை, நாணுதல், உறுப்புகளும் உச்சியலங்காரங்களும் பல்வேறு பூக்களும், யாழிகளும், பிறவும், சிற்பச்சிறப்பை மேலும் உயர்த்துகின்றன. இவ்விசைத்தூண்கள் கோயிலின் கவினுறு கலைத்தோற்றத்தைப் பூர்த்தி செய்யும் அணியில் தமது பங்கை குறைவற நிறைவேற்றும் குன்றாவிளக்காய் ஜொலிக்கின்றன.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »