பதிவு செய்த நாள்
13
அக்
2018
12:10
திருநெல்வேலி: இந்த ஆண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், தாமிரபரணி புஷ்கரணி விழா, விமரிசையாக நடைபெறும் நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள,
குலசேகரபட்டினத்தில், தசரா பண்டிகையும் நடைபெறுவது,
இப்பகுதி பக்தர்களுக்கு, இரண்டு மடங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவ ட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கடற்கரை கிராமமான குலசேகரபட்டினத்தில், ஆண்டு தோறும், தசரா விழா, வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கர்நாடகா மாநிலம்,
மைசூரில் நடைபெறும் தசரா திருவிழாவிற்கு இணையாக இந்த விழா, இப்பகுதியினரால் பேசப்படுகிறது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 19-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான, மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது. அந்த நாளில், 5 லட்சத்திற்கும்
அதிகமானோர், கடற்கரையில் கூடுவர். காளி, அம்மன், பரமசிவன், பார்வதி, விநாயகர், முருகன், முனிவர், பிரம்மா, லட்சுமி, சரஸ்வதி, அனுமன், சுடலை மாடன், கருப்பசாமி ஆகிய தெய்வ வேடமணிந்தவர்கள், இந்த நாட்களில், இந்த இரண்டு மாவட்டங்களிலும் உலா வருவர்.
அது போல, பிச்சைக்காரன், போலீஸ்காரர், வக்கீல், டாக்டர், நர்ஸ், பெண், குறவன், குறத்தி போன்ற, வித்தியாசமான, பல வகை வேடம் அணிந்தும், ஏராளமானோர் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர். பெரும்பாலும் ஆண்கள் தான், பல விதமான வேடமணிந்து வருவர். அதிகமானோர் பெண் வேடமணிந்தும், காளி வேடம் பூண்டும் இருப்பர். ஒரு மாதம், ஒரு வேளை, பச்சரிசி உணவு மட்டுமே உண்பது உள்ளிட்ட, கெடுபிடியான விரதமிருக்கும்
பக்தர்கள், வேடமிட்டு, இப்பகுதி நகரங்கள் மற்றும் கிராமங்களில் உலா வருவர்.
எத்தனை நிறங்கள், எத்தனை வேடங்கள் என, எண்ண முடியாத அளவிற்கு, வித விதமாக வேடமிட்டு, குலசேகரபட்டினத்தில் குவியப் போகும் பக்தர்களால், நிரம்பி வழியப் போவது பக்தி மட்டுமல்ல, ஆனந்தமும் தான்!