பதிவு செய்த நாள்
29
அக்
2018
12:10
பந்தலூர்:சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி, பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது.பந்தலூரில், எருமாடு சிவன் கோவில் கமிட்டி, அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம், இந்து அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. எருமாடு கோவில் வளாகத்தில் துவங்கிய பேரணி, இண்ட்கோநகர், ஸ்கூல் பிரிவு மற்றும் சுங்கம் பகுதி வரை சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
பேரணியில், சரண கோஷம் எழுப்பிய மக்கள், சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்; நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அமைதியான சூழலை பாதிக்கும் அசம்பாவிதங்களை தடுக்க கேரள அரசு முன்வர வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பேரணிக்கு கோவில் கமிட்டி தலைவர் சதானந்தம் தலைமை வகித்தார்.தொடர்ந்து சிவன் கோவில் வளாகத்தில் சபரிமலையின் புனிதம் மற்றும் அதனை பாதுகாக்க கட்சி பேதமின்றி இந்து சமய மக்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனோஜ்குமார், சுந்தரம், ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் சதீஷ்பாபு, அனூப், எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, கையுன்னி, கோட்டூர், பனஞ்சிரா, தாளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.