காலம் என்ற நியதிக்கு கட்டுப்பட்டே மனிதன் வாழ்கிறான். இதனால் கால தேவனான எமன் பெயரைச் சொன்னாலே பயப்படுகிறோம். ஆனால் தர்மம், நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவன் என்பதால் ’எமதர்மன்’ என்கிறோம். ஒருவரின் வாழும் காலம் முடிந்ததும், எவ்வித அறிவிப்பும் இன்றி உயிரைப் பறிக்கும் அதிகாரம் கொண்டவர் இவர்.
உயிர்களின் பாவ, புண்ணியக் கணக்கை சரிபார்க்க தனக்கு ஒரு உதவியாளர் தேவை என சிவபெருமானிடம் ஒருமுறை வேண்டினார். பார்வதி வரைந்த சித்திரம் ஒன்றிற்கு உயிர் கொடுத்து சித்திர குப்தரை வரவழைத்தார் சிவன். கையில் ஏடும், எழுத்தாணியும் ஏந்திய சித்ரகுப்தர் எமதர்மனின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். கேதுவின் அதிதேவதையான இவரை வழிபட்டால் பிறவிப்பிணி தீரும். காஞ்சிபுரம், தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் சித்ரகுப்தருக்கு கோயில் உள்ளது.