சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரை ’நால்வர்’ எனக் குறிப்பிடுவர். இந்த நால்வரையும் சிவன், ’பாலை, சூலை, ஓலை, காலை’ கொடுத்து ஆட்கொண்டதாக சொல்வர். சம்பந்தர் பசியால் அழுத போது சிவனே பார்வதியுடன் வந்து ’பாலை’ ஊட்டி ஞானம் அளித்தார். மனம் போல வாழ்ந்த நாவுக்கரசருக்கு ’சூலை’ என்னும் வயிற்றுவலியைக் கொடுத்து ஆட்கொண்டார். கிழவராக வந்த சிவன், சுந்தரரைத் தன் அடிமை என்று சொல்லி அதற்கான சாட்சியாக ’ஓலை’ (அடிமைசாசனம்) காட்டி ஆட்கொண்டார். குருநாதராக வந்த சிவன் மாணிக்கவாசகரின் தலையில் தன் ’காலை’ (திருவடி) வைத்து தீட்சையளித்தார்.