பதிவு செய்த நாள்
31
அக்
2018
11:10
சபரிமலை: மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் வெளிமாநில போலீசார் உட்பட 24 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து மண்டல, மகரவிளக்கு காலத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கல் முதல் சன்னிதானம் வரை இரண்டு கூடுதல் டி.ஜி.பி., 6 ஐ.ஜி., எட்டு எஸ்.பி.,க்கள், 24 ஆயிரம் போலீசார் பணியில் அமர்த்தப்படுகின்றனர். கடந்த காலங்களில் 3,000 போலீசார் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர்.ஒரே நேரத்தில் 6,000 போலீசார் வீதம் நான்கு ஷிப்ட்களில் பணியில் இருப்பர்.ஒரு ஐ.ஜி., 32 டி.எஸ்.பி., 42 இன்ஸ்பெக்டர், 98 எஸ்.ஐ.க்கள் சன்னிதானம், பம்பையில் இருப்பர். நிலக்கல் முதல் பம்பை வரை ஒரு ஐ.ஜி., பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார். மரக்கூட்டத்தில் ஒரு எஸ்.பி., நியமிக்கப்படுவார்.நிலக்கல்லில் 165 பெண் போலீசார் பணியில் இருப்பர். தேவைப்பட்டால் இவர்கள் பம்பை மற்றும் சன்னிதானத்துக்கு அனுப்பப்படுவர். இவர்களுடன், அதிரடிப்படை, கமாண்டோக்கள், மத்திய அதிவிரைவு படையினர், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி போலீசாரும் வரவழைக்கப்பட உள்ளனர்.சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ., 5- மாலை திறக்கிறது. 6-ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். இந்த இரண்டு நாட்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.