பதிவு செய்த நாள்
19
நவ
2018
12:11
ஆக்ரா:உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள உலக புகழ் பெற்ற தாஜ் மஹாலில், அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த, மூன்று பெண்கள் நுழைந்து, பூஜைகள் செய்த, வீடியோ வெளியாகி உள்ளது.
உ.பி.,மாநிலத்தின் ஆக்ரா நகரில் உலக புகழ் பெற்ற தாஜ் மஹால் உள்ளது; இது, முகலாய மன்னர் ஷாஜகானால், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக எழுப்பப்பட்டது.இந்நிலையில், அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள், நேற்று முன்தினம் 17ல்,, தாஜ் மஹாலுக்கு சென்றனர். அங்கு, ஊதுபத்தி ஏற்றி, கங்கை நீரை தெளித்து, அந்த பெண்கள் பூஜை செய்தனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவி, மீனா தேவி திவகார் கூறியதாவது:தாஜ் மஹாலுக்கு சென்று தொழுகை நடத்த, எல்லா நாட்களிலும் முஸ்லிம்கள் அனுமதிக்கப் படுகின்றனர். அதேபோல் இங்கு, நாங்களும்பூஜை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு வழங்கி வரும், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை உயரதிகாரி, பிரஜ் பூஷண் கூறியதாவது:தாஜ் மஹாலுக்குள்
என்ன நடந்தது என, எங்களுக்கு தெரியவில்லை. உள்ளே செல்வதற்கு, சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தொல்லியல் ஆராய்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், தாஜ் மஹாலில் பூஜைகள் செய்த தாக உலவும் வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருகிறோம். வீடியோவில் உள்ளபடி, தாஜ் மஹாலுக்குள், ஊதுபத்தி ஏற்றி பூஜைகள் செய்ததற்கான அடையாளம் இல்லை என்றனர்.