பதிவு செய்த நாள்
19
நவ
2018
12:11
கோவை: காங்கயம் பால் வெண்ணீஸ்வரர் கோவில் கோபுர கலசம் திருட்டுபோனதில், போலீசார் வழக்கு பதியாமல் தில்லுமுல்லு செய்துள்ளதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்த அரசம்பாளையத்தில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட, 2,000 ஆண்டு பழமையான, பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு முருகப் பெருமானுக்கு, முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் யாரும் பார்க்க முடியாதபடி ஒரு முகமும் உள்ளது.இந்த கோவிலின் கருவறை மீதிருந்த கோபுர கலசம், கடந்தாண்டு ஆக., 17ம் தேதி திருடுபோனது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலைய துறையினர் காங்கேயம் போலீசில் புகார் அளித்தனர். புகார் பெற்று கொண்டதற்கான, சி.எஸ்.ஆர்., நகல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், காங்கயம் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.இதன்பின், அரசு உரிமையியல் வக்கீலிடம் (கவர்மென்ட் பிளீடர்) கருத்து கேட்கப்பட்டது. அப்போது, இப் பிரச்னையில் இந்திய தண்டனை சட்டம், 379 பிரிவின் கீழ் இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்யலாம் என, அரசு உரிமையியல் வக்கீல் கருத்து தெரிவித்தார். ஆனால், இதன்பின்னும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.இதற்கிடையே கோபுர கலசம் திருட்டு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு இந்து சமய அறநிலைய துறையினர் புகார் அளித்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து மீண்டும் அரசு உரிமையியல் வக்கீலிடம் காங்கயம் போலீசார் கருத்து கேட்டனர். அதில், ஏற்கனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்ததால், காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்ய அவசியமில்லை என, கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில், போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் தில்லுமுல்லு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:கோபுர கலசம் திருட்டு குறித்து அரசு உரிமையியல் வக்கீல் கருத்து தெரிவித்த பின்னும் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தபின், மீண்டும் அரசு உரிமை யியல் வக்கீலிடம் புதிய கருத்தை போலீசார் கேட்டு வாங்கி பதிவு செய்துள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதனால், கலசம் திருட்டில் ஏதேனும் தில்லுமுல்லு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் உள்நோக்கம் என்ன, ஏன் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர் என்பது குறித்து மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தால், பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.