பதிவு செய்த நாள்
15
பிப்
2012
10:02
புதுடில்லி: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி குறித்து, பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை, சுப்ரீம் கோர்ட், இன்றோ அல்லது நாளையோ பரிசீலிக்கிறது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளது. சில தினங்களுக்கு முன், இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான வேலாயுதன் நாயர் தலைமையில், மதிப்பீட்டுப் பணிக்காக தருவிக்கப்பட்ட உபகரணங்கள் பரிசோதித்து பார்க்கப்பட்டன. இது குறித்து, அக்குழு தயாரித்துள்ள அறிக்கையும், கோவில் நிர்வாகக் குழுவின் அறிக்கையும், நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட், இன்று அல்லது நாளை பரிசீலிக்கும். அதன் பின், சுப்ரீம் கோர்ட் அனுமதி பெற்று, கோவில் பொக்கிஷ மதிப்பீட்டுப் பணி, வரும் 20ம் தேதி துவங்கும். ஒவ்வொரு நகையையும் மதிப்பீடு செய்ய, குறைந்தபட்சம், 20 நிமிடங்கள் தேவைப்படும்; மதிப்பீட்டுப் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; பாதுகாப்பிற்காக, வல்லுனர் குழு அளித்த, 14 அம்சங்களும் நிறைவேற்றப்படும் போன்ற பல்வேறு விஷயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே போல், கோவில் நிர்வாகத்தை, கேரள அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என, மாநில ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை, இன்று அல்லது நாளை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் முன் விசாரணைக்கு வர உள்ளது.