பதிவு செய்த நாள்
15
பிப்
2012
10:02
திண்டிவனம்:திண்டிவனம், ஜெயின் கோவில் கும்பாபிஷேக துவக்க விழா நிகழ்ச்சியில், அந்தரத்தில் மிதந்த சாமியார் மக்களை கவர்ந்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில், ஜெயின் சமூகத்தினரால் பார்சுவநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, இக்கோவிலின் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழா, வரும் 17ம் தேதி நடக்கிறது. இதற்காக, கடந்த 6ம் தேதி, பார்சுவநாதரின் நகர் பிரவேசம் நடந்தது. நேற்று முன்தினம், 13ம் தேதி காலை கும்பாபிஷேக துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு அருகிலிருந்த தனி மேடையில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்தரத்தில் தியானம் செய்தபடி சாகசம் நிகழ்த்தினார். மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரையில், மூன்று மணி நேரம் அவர் அமர்ந்த நிலையிலேயே இருந்தார்.இந்த தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான மக்கள், அவரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இது குறித்து, விழா குழுவினர் கூறியதாவது:இந்த வாலிபர் பெயர் சுனில், உத்திராஞ்சல் மாநிலத்திலிருந்து வந்துள்ள கலைக் குழுவினருடன் வந்துள்ளார். மக்களை ஆச்சரியத்துடன் கவர்வதற்கான பல நிகழ்ச்சிகளை செய்ய உள்ளதாகவும், அதில் ஒன்று தான் இது எனவும் கூறினர்.