மங்கலம்பேட்டை: முகாசபரூர் கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நடந்த குருபூஜை விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குருபூஜை விழா நேற்று 29ம் தேதி நடந்தது. இதையொட்டி காலை 5:00 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 10:00 மணிக்கு மகா யாகம், 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு 108 சாதுக்களுக்கு பாதபூஜை, 1:30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில், சென்னை, பெங்களூரூ, திருச்சி, மதுரை, புதுச்சேரி, சதுரகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.