நேத்திர தரிசனம்: தஞ்சை அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி. இங்குள்ள தேவநாயகி சமேத சக்ரவாகேஸ்வரரை பிராமி தேவி வழிபட்டு பேறுபெற்றாள். சக்ரவாஹப் பறவையின் வடிவில் அன்னை தேவநாயகி ஈசனின் நேத்திரங்களை வழிபட்டு வணங்கிய ஊர் இது. பிரதமை திதிநாளில் இந்தத் தலத்துக்குச் சென்று வணங்கினால் மோட்ச வாழ்வைப் பெறலாம்.
கங்கா தரிசனம்: அய்யம்பேட்டையிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அரிமங்கை. இங்குள்ள ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வரரை, சப்தமாதர்களில் மகேசுவரிதேவி வழிபட்டு பேறுபெற்றாளாம். அம்பிகை பார்வதி சிவகங்கையைத் தரிசித்த தலம் இது. துவிதியை திதியில் இங்கு வணங்கினால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
திரிசூல தரிசனம்: அய்யம்பேட்டையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது சூலமங்கலம். இங்குள்ள அலங்காரவல்லி சமேத கீர்த்திவாகீஸ்வரரை கவுமாரி வழிபட்டு பேறுபெற்றாள். இங்கே, அம்பாள் திரிசூல தரிசனம் பெற்றாளாம். திரிதியை திதியில் இங்கு வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.
திருக்கழல் தரிசனம்: அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது நல்லிசேரி (நந்திமங்கை). இங்குள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரரை வைஷ்ணவி வழிபட்டு பேறுபெற்றாள். இங்கு அன்னை சக்தி, ஈசனின் திருக்கழல் ஸ்பரிசத்தைப் பெற்றாள் என்கின்றன புராணங்கள். பிரதோஷ நாளில் இங்கு வணங்கினால் குபேரச் சம்பத்துக் கிடைக்கும்.
உடுக்கை தரிசனம்: அன்னை ஸ்வாமியை வழிபட்டு உடுக்கை தரிசனம் பெற்ற தலம், தஞ்சை பாபநாசத்தை அடுத்துள்ள பசுபதி கோயில். இங்கு அருளும் பாலவள நாயகி சமேத பசுபதீஸ்வரரை வராஹிதேவி வணங்கி பேறுபெற்றாள். இங்கு வந்து வழிபட்டால், வாழ்வில் தீமையே அண்டாது என்கிறார்கள்.
பிறை தரிசனம்: பசுபதி கோயிலுக்கு 1 கி.மீ. தொலைவில் உள்ளது தாழமங்கை. அம்பாள் மூன்றாம்பிகையுடன் ஸ்வாமியைத் தரிசித்த தலம் இது. இங்குள்ள ராஜராஜேஸ்வரி சமேத சந்திரமவுலீஸ்வரரை, இந்திராணி வழிபட்டு பேறுபெற்றாளாம். குடும்ப ஒற்றுமை மேலோங்க வரம் தரும் தலமிது.
நாக தரிசனம்: பசுபதி கோயிலுக்கு அருகே உள்ளது திருப்புள்ள மங்கை தலம். அல்லியங்கோதை சமேத பிரம்மபுரீஸ்வரரை சாமுண்டி வழிபட்டு பேறுபெற்றாள். அம்பிகை, ஈசனின் நாகாபரணத்தை தரிசித்த தலமிது. இங்கு வந்து வழிபட்டால், நாக தோஷங்கள் விலகும்; திருமணத்தடைகள் நீங்கும்.