பதிவு செய்த நாள்
06
டிச
2018
12:12
கொளத்தூர்: மாரியம்மன் கோவில் சிலையை ஒப்படைக்கக்கோரி, கோவிந்தப்பாடியில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், கொளத்தூர், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தப்பாடியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இது, கோவிந்தப்பாடி, அருகிலுள்ள கொல்லப்பட்டியைச் சேர்ந்த, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், 20 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்தது. ஒரு தரப்பினர், நீதிமன்றத்துக்கு சென்றதால், சில மாதங்களுக்கு முன், வருவாய்த்துறையினர், கோவிலை திறந்தனர்.
மீண்டும், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால், கோவில் பூட்டப்பட்டது. உயர்நீதி மன்ற உத்தரவுப்படி, நேற்று (டிசம்., 5ல்) காலை, கோவிலை, மக்கள் வழிபாட்டுக்கு திறக்க, மேட்டூர் தாசில்தார் அறிவுடைநம்பி, வருவாய்த்துறையினர் சென்றனர்.
அசம்பாவிதத்தை தடுக்க, டி.எஸ்.பி., சுந்தரராஜன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவில் நடைதிறக்க சென்ற தாசில்தாரை, ஒரு தரப்பினர் முற்றுகையிட்டு, மாரியம்மன் உற்சவர் ஐம்பொன் சிலை, மற்றொரு தரப்பினர் கட்டுப்பாட்டிலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் உள்ளது.
அச்சிலையை கொண்டு வந்து, கோவிலில் வைத்தால் மட்டுமே நடைதிறக்க அனுமதிப்போம் எனக்கூறினர். அதில், உடன்பாடு ஏற்படாததால், மதியம், 12:00 மணிக்கு, ஒரு தரப்பைச் சேர்ந்த மக்கள், மேட்டூர் - மைசூரு நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூர் ஆர்.டி.ஓ., லலிதா, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டிச., 7ல் (நாளை), சிலையை, மற்றொரு தரப்பினர் ஒப்படைப்பதாக கூறினர்.
அன்று, சிலையை கொண்டு வந்து வைத்துவிட்டு, நடைதிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, லலிதா கூறினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதால், மக்கள் மறியலை கைவிட்டனர்.