பதிவு செய்த நாள்
11
டிச
2018
01:12
சிவன் கோயில்களில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். சிவனின் அம்சமான இவர், சிவனால் உருவாக்கப்பட்டவர். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் தொழில்போட்டி, அபரிமித வளர்ச்சியால் ஏற்படும் திருஷ்டி, பொறாமை, கிரகதோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி போல ’சம்பக சஷ்டியும்’ (கார்த்திகை வளர்பிறை சஷ்டி) பைரவருக்கு சிறப்பானது.சம்பக சஷ்டிக்கும் பைரவருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? புராணகாலத்தில் ஹிரண்யாட்சகன் என்பவன் இருந்தான். அசுரன் என்றாலும் சிவபக்தியும் அவனிடம் இருந்தது. குழந்தை வரம் வேண்டி தவத்தில் ஈடுபட்டான். தவமிருப்போருக்கு தன்னையே தருபவர் அல்லவா சிவன்... தவக்கனல் சிவலோகத்தை எட்டவே, நேரில் காட்சியளித்தார் சிவன்.
குறை தீர்க்கும்படி வேண்டியவனுக்கு ஒன்றுக்கு இரண்டாக வரம் அளித்தார். மகிழ்ந்தான் ஹிரண்யாட்சகன். அவனது மனைவிக்கு அந்தகாசுரன், சம்பகாசுரன் (இவனால் வந்தது தான் சம்பக சஷ்டி) என இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். தந்தை போலவே பிள்ளைகளும் அட்டூழியம் செய்வதை தொழிலாகக் கொண்டனர். தந்தையின் தவமும், சிவனின் அருளும் இணைந்ததால் யாரும் அவர்களை எதிர்க்கத் துணியவில்லை. பூலோகம் மட்டுமின்றி தேவலோகத்திலும் இவர்களின் அராஜகம் ஓங்கியது. பொறுக்க முடியாத தேவர்கள், சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். தேவர்களைக் காப்பாற்றவும், பூலோகத்தில் தர்மம் தழைக்கவும் தன்னிடம் இருந்தே குழந்தை ஒன்றை உருவாக்கி அதை உற்றுப்பார்க்க குமாரனாக (இளைஞனாக) விஸ்வரூபம் பெற்றது. அந்த திருவடிவமே ’பைரவர்’ கோலம். அதிலிருந்து எட்டு பைரவர்கள் உருவாக, மீண்டும் அதிலிருந்து அறுபத்து நான்கு பைரவர்கள் புறப்பட்டனர். கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியன்று அந்தகாசுரன் மற்றும் சம்பகாசுரனின் வதம் நிகழ்த்தப்பட்டது.
கொல்லப்பட்ட இருவரும் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் உண்டானது. இதிலிருந்து மீள யாத்திரை புறப்பட்டார். அதில் கொன்றை வனம் ஒன்றை அடைந்தார். அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டு, யோக நிலையில் தவத்தில் ஆழ்ந்தார். அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவன் காட்சியளித்து தோஷம் போக்கினார். ’பைரவா! இந்தக் கொன்றை வனத்தில் நீயும் எம்முடன் இருந்து உன்னை வணங்குவோரின் குறைகளைப் போக்கியருள்க’ என உத்தரவிட்டார். அவரும் இங்கு யோகபைரவராக தங்கினார். அக்கொன்றை வனமே சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் என்னும் திருத்தலமாக திகழ்கிறது. நாயன்மார்களால் பாடல் பெற்ற இங்கு கவுரிதாண்டவ மூர்த்தி, ஸ்ரீதளிநாதர், திருத்தளிநாதர், ஸ்ரீதளீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் அருள்கிறார். அம்மன் சிவகாமசுந்தரி. இங்கு சம்பகசஷ்டி விழா ஆறுநாள் நடக்கும். குமரனாக (இளைஞன்) வந்த பைரவர் அசுரவதம் நிகழ்த்தியதால் சம்பகசஷ்டிக்கு குமாரசஷ்டி, சுப்ரமண்யசஷ்டி என்றும் பெயருண்டு. கார்த்திகை மாத வளர்பிறை பிரதமையன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர். பைரவர் ஹோமம், அபிஷேகம், ஆராதனை விமரிசையாக நடக்கும். இங்குள்ள யோகபைரவர் சாந்தநிலையில் வலதுகையில் சிவலிங்கம் வைத்தும், இடதுகையை தொடையில் வைத்தநிலையிலும் காட்சியளிக்கிறார். வாகனமான நாய் அருகில் இல்லை. அத்தர், புனுகு, ஜவ்வாது, சந்தனாதி தைலம், பன்னீர், பால், தயிரால் அபிஷேகம், செவ்வரளி மற்றும் மருக்கொழுந்து மலர்களால் அலங்காரம், செவ்வாழைப்பழம், தேன் கலந்த வடை நைவேத்யம் செய்வர்.
நினைத்தது நிறைவேற வெள்ளைப்பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றுகின்றனர். சுத்தமான துணியில் மிளகுகளை முடிச்சிட்டுக் கட்டி, அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றிட வறுமை, கடன், திருஷ்டி அகலும். புதிய முயற்சி, தொழிலில் வெற்றி பெற வேண்டுபவர்கள் சம்பகசஷ்டி காலத்தில் தரிசிக்க கூடுதல் நன்மை கிடைக்கும்.