பதிவு செய்த நாள்
11
டிச
2018
03:12
சபரிமலை: சபரிமலை பெருவழிப்பாதையில் யானைகள் நடமாடுவதால், பக்தர்கள் மாலை நேரத்திற்கு பின் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, பெருவழிப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள், எருமேலியில் இருந்து அழுதை, கரிமலை, பெரியானைவட்டம் வழியாக பம்பை வருவர். அங்கிருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் அடைவர். பெருவழிப்பாதை முழுக்க முழுக்க காட்டுப்பாதை. மகரவிளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் இந்த பாதையில் வருவர். தற்போது மண்டல காலத்திலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கரிமலை மற்றும் வலியான வட்டத்தில் காட்டு யானைகள் நடமாடுகின்றன.
இதனால், கரிமலையில் மாலைக்கு பின் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அழுதையில் மதியம், 1:00 மணிக்குள் வரும் பக்தர்கள் மட்டுமே, தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன் பின் வரும் பக்தர்கள் அழுதையில் தங்கி, அடுத்த நாள் காலையில் செல்ல வேண்டும். இதற்காக இங்கு போலீசார், வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பக்தர்கள் அதிகமாக வரும் வடசேரிக்கரை இலவங்கல் நிலக்கல் சாலக்கயம் சாலையிலும், யானைகள் வருகின்றன.
நேற்று முன்தினம் (டிசம்., 9ல்) பிலாப்பள்ளி வனத்துறை அலுவலகம் அருகே ஆறு யானைகள் வந்தன. அவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.