சபரிமலை: சபரிமலையில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது, பக்தர்கள் சுமுகமாக தரிசனம் நடத்த முடிகிறது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சாலக்குடியை சேர்ந்த 25 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் சபரிமலையில் தரிசனத்துக்கு வந்த போது, பிபின், அகில், விபின் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபரிமலையில் பக்தர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அமைதியாக தரிசனம் நடத்த முடியவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஏற்கெனவே வழக்குகள் உள்ளதாகவும், சபரிமலை விஷயத்தில் இவர்கள் சாலக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் என்றும் தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சபரிமலையில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை, பக்தர்கள் அமைதியாக தரிசனம் நடத்த முடிகிறது, யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், போலீசாரால் பிரச்னை இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.