பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
நாகர்கோவில்: சபரிமலையில் புனிதத்தை பாதுகாக்க கோரி, கேரள மாநிலம், காசர்கோட்டில் இருந்து, கன்னியாகுமரி வரை, கையில் தீபம் ஏந்தி, அய்யப்ப ஜோதி சரண கோஷம் நிகழ்ச்சி, நேற்று (டிசம்., 26ல்) மாலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்வதற்கான அனுமதியை எதிர்த்து, அய்யப்ப பக்தர்கள், மற்றும் ஹிந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சபரிமலையின் புனிதத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி, அய்யப்ப தர்ம சேனா சார்பில், நேற்று (டிசம்., 26ல்)மாலை கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து, கன்னியாகுமரி வரை முக்கிய சந்திப்பு, மக்கள் கூடும் இடங்கள், தேசிய நெடுஞ்சாலையோரங்களில், அய்யப்ப ஜோதி சரணகோஷம் என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில் கையில் தீபத்தை ஏந்தியவாறு நின்ற அய்யப்ப பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் சரண கோஷம் எழுப்பினர்.
குமரி மாவட்டத்தில் ஹிந்து கோவில் கூட்டமைப்பினர், அய்யப்ப தர்ம சேனாவுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காசர்கோட்டில் துவங்கிய அய்யப்ப ஜோதி சரண கோஷம், குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் வழித்தடத்தில் பல இடங்களில் நடந்தது. கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் முன் நிறைவடைந்தது.