பதிவு செய்த நாள்
01
ஜன
2019
10:01
நிகழும் விளம்பி ஆண்டு, மார்கழி மாதம், 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை. குரு பகவானின் ஆதிக்கத்தில், தட்சிணாயனம் ஹேமந்தருதுவில், கிருஷ்ணபட்சம், தசமி திதியில், சமநோக்குக் கொண்ட சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னம், அமிர்தயோக நன்னாளில், நள்ளிரவு, 12:௦௦ மணிக்கு, ஆங்கிலப் புத்தாண்டு, 2019 பிறந்தது. கோயில்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஜனவரி 1ம் தேதி தான், ஆண்டின் ஆரம்பம் என்ற நிலைப்புத் தன்மை வருவதற்கு முன், 2000 ஆண்டுகளுக்கு முன், மார்ச், 25ம் தேதியும், ரோமானியர்களின், மார்ச், 1ம் தேதியும், 10 மாதங்கள் தான் ஒரு ஆண்டு என்றிருந்ததை, 12 மாதங்களாய் மாற்றியும், ஜனவரி, பிப்ரவரி எனப் பெயரிட்டும், இப்படியாக பல கட்டங்களைத் தாண்டி, இப்போது நாம் பின்பற்றும், ஜனவரி 1ம் தேதியை, புத்தாண்டாக கடைப்பிடித்து வருகிறோம்.ஆங்கில புத்தாண்டு என்பது, 500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. போப், 13ம் கிரிகோரி ஜூலியன், காலண்டரை ரத்து செய்து, நான்காண்டுகளுக்கு ஒரு, ’லீப்’ ஆண்டு எனக் கூறி, அந்த லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கு, 29 நாட்கள் என, 365 நாட்களையும், 12 மாதங்களுக்கு மிகச் சரியாக அடக்கினார். அதில், அறிவியல் உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும், ’கிரிகோரியின் காலண்டர்’ முறை பின்பற்றப்பட்டது.ஜனவரி என்ற பெயர், ரோமானிய மன்னர் ஜனஸின் பெயரிலிருந்து வந்தது. ரோமன் இதிகாசத்தில், துவக்கங்களின் கடவுளாக காணப்பட்ட, ஜானஸ் லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே, கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான, ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.ஆங்கிலப் புத்தாண்டு, தமிழர்களால் மட்டுமின்றி, வேறு இனத்தவர்களாலும் கொண்டாடப்படும், முக்கிய சிறப்பு தினம். ஆனால், இப்படி ஆங்கிலப் புத்தாண்டு என, ஜன., 1ம் தேதியைக் கொண்டாடுவது, கிறிஸ்துவ மதம் தொடர்பானது என, சொல்வோரும் உண்டு.ஜூலியஸ் சீசர் மீண்டும் இந்தக் கொண்டாட்டத்தை, நடைமுறைக்கு கொண்டு வந்தாரே தவிர, அது கிறிஸ்துவ புத்தாண்டு அல்ல. ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகள், தங்கள் சொந்த காலண்டரின்படி உள்ள, ஆண்டு பிறப்பையும், சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்; ஆங்கிலப் பிறப்பையும், உற்சாகமாக வரவேற்கின்றனர்.
2019-புத்தாண்டு இன்று உலகில் முதன்முதலாக நியூசிலாந்தில் பிறந்தது. இந்தியாவில் புதுடில்லியில் இந்தியா கேட் பகுதியில் இப்போத பொதுமக்கள் குவிய துவங்கியுளளனர். கடும் குளிர் நிலவிய போதிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தியா கேட்டில் குவிந்துள்ளனர். இதற்காக இந்தியா கேட் மின் விளக்கில் ஜொலித்தது. இதே போன்று மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் பொதுமக்கள் தங்கள் குவிந்துள்ளனர். மேலம் இசைக்கலைஞர்கள் பலர் ஆடிப்பாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க காத்துள்ளனர். மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடினர்.
புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரை செல்லும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டை வரவேற்க சென்னை மெரினாவில் பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.மேலும் தமிழகத்தில் மதுரை , கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பெரு நகரங்களில் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை ஆடிப்பாடி கொண்டாடினர். கோயில்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆங்கில புத்தாண்டையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விபூதி அலங்காரத்தில் பிள்ளையார் அருள்பாலித்தார். கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலில் படித்திருவிழா மற்றும் ஆங்கிலபுத்தாண்டை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.