பதிவு செய்த நாள்
02
ஜன
2019
12:01
அவலுார்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டிலிருந்து கிளம்பிய விஸ்வரூப கோதண்டராமர் சிலை விழுப்புரம் மாவட்டம் கப்ளாம்பாடியில் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, ஈஜிபுரத்தில் நிறுவ, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தில் 64 அடி உயரத்தில் 300 டன் எடையில் வடிவமைக்கப்பட்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை, 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் எடுத்து செல்கின்றனர்.
இந்த சிலை கடந்த 25 ம் தேதி மாலை விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகில் உள்ள செல்லபிராட்டை கூட்ரோட்டில் தனியார் கல்லுாரி அருகே நின்றது. மாநில நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைத்த பின் கடந்த 30 ம் தேதி பகல் 1;00 மணிக்கு வளத்தி வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டுக்கு அன்று மாலை 5;30, மணிக்கு சென்றடைந்தது.அங்கிருந்து நேற்று காலை 11;50, மணிக்கு புறப்பட்ட சிலை, விழுப்புரம் மாவட்ட எல்லையான சஞ்சீவிராயன் பேட்டை, மேல்செவலாம்பாடி வழியாக மாலை 3:00 மணிக்கு கப்ளாம்பாடி கிராமத்திற்கு வந்தது. அங்கிருந்து சிலை செல்லும் வழியில் இடையூறாக உள்ள மூன்று வீடுகளை இடிக்க வேண்டியுள்ளதால், சிலை நிறுவன குழுவினர், வீட்டின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக கோதண்டராமர் சிலை, கப்ளாம்பாடி கிராமத்தில் நிறுத்தி வைத்துள்ளதால், அவலுார்பேட்டையில் இருந்து சேத்பட் வழியாக சென்னைக்கு செல்லும் பஸ்கள், மேல்மலையனுார்-வளத்தி வழியாக திருப்பி விடப்பட்டன. இதே போல் திருவண்ணாமலை செல்லும் பஸ்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.