பதிவு செய்த நாள்
02
ஜன
2019
12:01
விருதுநகர்: புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தன. விருதுநகர் வெயிலுகந்தமனுக்கு தங்க கவச அலங்காரம், பராசக்தி மாரியம்மன், வாலசுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. ராமர் கோயில், சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில், வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில், சொக்கர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று அதிகாலை 4 :00மணிக்கு கோயில் நடை திறக்கபட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. புத்தாண்டின் முதல்நாளாக இருந்ததால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் குவிந்தனர். நேரம் செல்ல வரிசையில் காத்திருந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள், கொடிமரம், ஆண்டாள் சன்னதி, பிறப்பிடம், வடபத்ரசயனர் சன்னதி, ராஜகோபுரத்தை தரிசித்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு புத்தாண்டு பிரசாதமாக லட்டு வழங்கபட்டது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் துாயதோமா ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு கடந்த ஆண்டு ஆராதனையுடன் துவங்கி அதிகாலை 3:00 மணிவரை புத்தாண்டு ஆராதனை நடந்தது. சபைகுரு சாம்பிரபுவை திருச்சபை மக்கள் சந்தித்து ஆசிபெற்றனர்.* ஸ்ரீவில்லிபுத்துார் திருஇருதய ஆலயத்தில் இரவு 11:00 மணிக்கு நன்றி வழிபாடு , அதிகாலையில் திருப்பலி நடந்தது. பாதிரியார் அல்வரஸ் செபாஸ்தியான் திருப்பலி , உதவி பாதிரியார் அந்தோணிதுரைராஜ், புத்தாண்டு வாழ்த்து செய்தி வழங்கினர். 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., சர்ச்சில் புத்தாண்டு ஆராதனைகள் நடந்தது. இரவு 11:00 மணிக்கு பழைய வருடஆராதனை, நள்ளிரவில் புத்தாண்டு ஆராதனை நடந்தது. சபை குரு எபினேசர் ஜாஷ்வா அருள் செய்தி வழங்கினார்.