பதிவு செய்த நாள்
02
ஜன
2019
01:01
பல்லடம்:பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்டுகளை தயார் செய்வதில், பல்லடத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், இப்போதே ஆர்வம் காட்டி வருகிறார்.
பொங்கல் பண்டிகை என்றாலே, வீடுகள் தோறும், வேப்பிலை, ஆவாரம் பூ, மற்றும் பூளைப்பூ கொண்டு, காப்பு கட்டுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், காப்பு கட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார், பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த முதியவர் ராமசாமி.
அவர் கூறியதாவது:அண்ணா நகரில் பெட்டி கடை நடத்தினேன். வருமானம் குறைவு என்பதால், பண்டிகைகளின்போது, இதுபோன்று ஏதாவது செய்து வருவாய் பார்த்து வருகிறேன். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், அருகிலுள்ள காட்டு பகுதிகளுக்கு சென்று, பூளை பூக்களை சேகரித்து, கட்டுகளாக கட்டி தயார் செய்து வருகிறேன்.பண்டிகை நெருங்கும் நேரத்தில், பூளை பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விடுகிறது. மேலும், அவை எளிதில் வாடாது என்பதால், அவற்றை இப்போதே பறித்து கட்டுகளாக்கி வருகிறேன். பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன், வேப்பிலை மற்றும் ஆவாரம் பூக்களை இணைத்து, கட்டுகளாக்கி விற்பனை செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.