பதிவு செய்த நாள்
03
ஜன
2019
01:01
ஈரோடு: ஈரோட்டில், அனுமன் ஜெயந்தி விழாவில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, வார வழிபாட்டுக்குழு சார்பில், 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. ஈரோடு, வ.உ.சி., பூங்கா பேச்சிபாறையில், மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 5ல், அனுமன் ஜெயந்தி விழா, நடக்கிறது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வட மாநில பக்தர்களும் அதிகம் வருகின்றனர். அனுமன் ஜெயந்தி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, வார வழிபாட்டுக்குழு சார்பில், ஆண்டுதோறும் லட்டு, செந்துாரக்கயிறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் பிரசாதம் வழங்க, 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் செய்யும் பணி, கடந்த, இரண்டு நாட்களாக, நடந்து வருகிறது.
லட்டு தயாரிப்புக்கு, 1,080 கிலோ கடலைமாவு, 1,700 கிலோ சர்க்கரை, உலர்ந்த திராட்சை, 125 கிலோ, முந்திரி, 125 கிலோ, நெய், 40 கிலோ, ரீபைன்ட் ஆயில், 800 கிலோ, ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 40 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுக்குழு தலைவர் சிற்றரசு கூறியதாவது: மகாவீர ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு சார்பில், கடந்த ஆண்டு, 60 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டன. பக்தர்கள் வருகை அதிகமானதால், இம்முறை, 75 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. லட்டுடன் சேர்த்து வழங்க, 50 ஆயிரம் செந்துாரக்கயிறுகள், திருப்பதியில் இருந்து தருவிக்கப் பட்டுள்ளது. இவை, சிறப்பு பூஜைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.