பதிவு செய்த நாள்
03
ஜன
2019
01:01
மியூசிக் அகாடமி, 2018- - 19ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை, அருணா சாய்ராமுக்கு வழங்கியிருக்கிறது. கர்நாடக இசையை ஜனரஞ்சகப் படுத்தியதிலும், பரப்பியதிலும், இவரது பங்கு, அனைவரின் அங்கீகாரத்தையும் பெற்றது. மியூசிக் அகாடமியில், இவர் நிகழ்த்திய கச்சேரியில், தியாகராஜரின், தேவகாந்தாரி ராக, துளஸம்மா மற்றும் சியாமா சாஸ்திரியின், மாஞ்சி ராக, ப்ரோவவம்மா கிருதிகளைப் பாடிய விதம், இவருடைய அஸ்திவாரத்தைப் பறை சாற்றின.
ஹரிகாம்போதியில், தினமணி வம்சவும், பந்துவராளியில், சாரசாஷ கிருதிகளைப் பாடினார். ஹரிகாம்போதிக்கு நிரவலும், கற்பனை ஸ்வரமும் பாடினார். ராகம், தானம், பல்லவி பாடியது, தோடியில். கால நிர்ணயமுள்ள நீண்ட கார்வைகளையும், ராகத்தை மேம்படுத்திக் காட்டும் நுணுக்கமான பிரயோகங்களையும் கையாண்டது மிகச் சிறப்பு. கைவிட மாட்டான் ரங்கன் பாண்டுரங்கன் நம்பும் அடியாரை என்ற வரியை, தன் பல்லவியாக அமைத்திருந்தார்.
விட்டல் ராமமூர்த்தி வயலினில் நல்ல கற்பனை வளத்துடன், அருணாவின் போக்கறிந்து, ஆலாபனைகளை அளித்தார்.
ஜே.வைத்தியநாதன் மிருதங்கத்திலும், கார்த்திக் கடவாத்தியத்திலும், பாடல்களைப் பொறுத்து, தங்கள் வாசிப்புத் திறனை வெளிப்படுத்தி, சிறப்பு செய்தனர்.தோடியில் உருகி...பாம்பே ஜெயஸ்ரீ, மியூசிக் அகாடமியில் பாடிய, நாஜீவாதார என்ற தியாகராஜர் கிருதியைக் கையாண்ட விதம், வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமனை நினைவு படுத்தியது; காரணம், அவரிடமிருந்து ஜெயஸ்ரீ கற்றது!தோடி ராகத்தை ஜெயஸ்ரீ கையாண்ட விதம் தனி. இவருக்கு, குரல் வரப்பிரசாதம்! இனிமை, கம்பீரம், காத்திரம், மிருதுத் தன்மை எனும் பல சொரூபங்களைக் காட்டினார். சியாமா சாஸ்திரியின், நின்னே நம்மினானு பாடினார்.
காமாக்ஷி கஞ்சதளாயதாக்ஷி காருண்யமூர்த்தி என்ற பதத்தில், உருக்கத்துடன் நிரவல் பாடினார்.இதற்குப் பிறகு, வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டும், ஹம்சானந்தி ராகம், தானம் பல்லவிக்கென்று வந்தது. பல்லவிக்கான வரியாக, வா குகா முருகா ஷண்முகா உனது பதமே துணை!வயலினில் பாஸ்கர் தனக்கே உரிய வழியில், ஜெயஸ்ரீ ராகங்கள் பாடிய முறையிலேயே, ஆலாபனைகளை வழங்கினார்.
பத்ரி மிருதங்கத்திலும், புருஷோத்தமன் கஞ்சிராவிலும், ஜெயஸ்ரீயின் குரலுக்கேற்ப ஒலியளித்து வாசித்தது மிகப் பொருத்தமாக இருந்தது.வாய்ப்பாட்டும், மாண்டலினும்!விஷ்வாசின் மாண்டலின் கச்சேரி, இந்தியன் பைன் ஆர்ட்சின் ஆதரவில் எதிராஜ் கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்ததுவானொலியில் ஒலிபரப்பாகும் கச்சேரிகளுக்கு இணையான அறுபது நிமிட கால அவகாசம் தான் தனக்குள்ளது என்றுணர்ந்து வாசித்து, மூன்று பாடல்கள் மூலம், தன் திறமையை வெளிப்படுத்திய விஷ்வாசின் வாசிப்பில், நல்ல அழுத்தமும் அதனுடன் இனிமையும் சேர்ந்திருந்தது.முதலில், லலிதா ராகத்தில், தீஷிதரின், ஹிரண்மயீம் க்ருதியை வழங்கிய விதம், பாடலை வாசித்து முடித்த பின்பும் நெஞ்சை விட்டகலாமல் இருந்தது. அடுத்து வந்த ஷண்முகப்ரியா ராக ஆலாபனையில், ராகத்தைப் படம் பிடித்துக் காட்டும் பிரத்யேக மூர்ச்சனைகளைக் கொண்டு வடிவாக்கினார்.
கடைசியாக வந்த, இரக்கம் வராமல் போனதென்ன என்ற பெஹாக் ராக, கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலில், வாய்ப்பாட்டின் கவுரவம் தெரிந்தது.இவர் தற்போது, கோட்டு வாத்தியக் கலைஞர், அல்லம் துர்கா பிரசாதிடம் கற்றுக் கொண்டிருக்கிறார். விஷ்வாஸ் நன்றாகப் பாடக் கூடியவராம். இவ்வாறு பாடவும் தெரிந்து, வாத்தியத்திற்கும் வருபவர்கள் நன்றாக பிரகாசிப்பர். வாய்ப்பாட்டு, இவர்களுக்கு உள்ளே இறங்கி, நல்ல அசைபோடும்; பிறகு அதை, வாத்தியத்தில் கொண்டு வர முனைவர். இந்த இசை மாணவன் மீது, நம்பிக்கை வைப்போம்.வயலின் பக்கவாத்தியமான சிவராமன், தான் கற்ற நிலையில் நின்று வாசித்தார். மிருதங்கத்தில் சந்தோஷ் ரவீந்திரபாரதி, குறுகிய அழகான தனியொன்றையும் வாசித்தளித்தார்.- எஸ் சிவகுமார்