பதிவு செய்த நாள்
22
பிப்
2012
11:02
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ள, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை, மதிப்பீடு செய்யும் பணி துவங்கியுள்ள நிலையில், ஒரு பொருளை மதிப்பீடு செய்ய, 20 நிமிடம் தேவைப்படுவதால், மதிப்பீடு பணி முடிய பல மாதங்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில், பூமிக்கடியில் ஆறு அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மற்றும் கலை நுணுக்கங்கள் நிறைந்த தங்க, வெள்ளி, வைர பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இவற்றை, மதிப்பீடு செய்ய டாக்டர் வேலாயுதன் நாயர் தலைமை யிலான நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இந்த குழுவினர், பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியை நேற்று துவக்கினர். முதலில், "எப் அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுத்து பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த அறையில் இருந்த, ஏழு வெள்ளி பொருட்கள் முதலில் எடுக்கப்பட்டு, அவைகள் டிராலி மூலம் மதிப்பீடு செய்யும் தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, நரசிம்மமூர்த்தி சன்னிதியில் பயன்படுத்தப்படும் தீபாராதனை பொருட்களும், அர்ச்சனைக்கு பயன்படும் தட்டுக்களும், தங்க கலசங்களும் மதிப்பீடு செய்யப்பட்டன. இவை தயாரிக்கப்பட்ட காலம், காரட், எடை, தற்போது அதன் மதிப்பு, அவற்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள எண்கள், விவரங்கள் ஆகிய பல விவரங்களும், மதிப்பீடு பணியின் போது குறிப்பிடப்பட்டன. ஒரு பொருளை மதிப்பீடு செய்ய, 20 நிமிடமாகிறது. பொருட்கள் குறித்த அனைத்து தகவல்களும், "3டி தொழில்நுட்பத்திலும் பதிவு செய்யப்படுகிறது. பதிவு செய்யப்படும் அனைத்து விவரங்களும், கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும், ஒரே நேரத்தில் பதிவாகி கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்படும். மதிப்பீடு பணி நிற்காமல், தினமும் தொடர்ந்து நடைபெறும்.
"சி அறை திறக்கப்படுவது எப்போது? பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில், "சி அறையை திறக்க, திருவனந்தபுரம் கீழ்கோர்ட்டின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளதால், அவ்வறையை மதிப்பீடு குழுவினர் திறக்கவில்லை. மேலும், அந்த அறையை கண்காணிக்க, கீழ்கோர்ட் நியமித்த வழக்கறிஞரும், நேற்று முன்தினம், கோவிலுக்கு வரவில்லை. மதிப்பீடு பணியில் முதலில் "சி அறை திறக்கப்போவதாக தான் அறிவிக்கப்பட்டது. இப்பிரச்னையை, நாளை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க, மதிப்பீடு குழுவினர் முடிவு செய்துள் ளனர். மேலும், கோவிலில் உள்ள நான்கு பாதாள அறைகளையும் கீழ்கோர்ட் சீல் வைத்துள்ளதால், அவற்றை திறப்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெற மனு தாக்கல் செய்யப்படும். சில தினங்களுக்கு முன், பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷ பாதுகாப்பு விஷயத்தில், திருவனந்தபுரம் கீழ்கோர்ட் தலையிட வேண்டாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.