அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நடந்த தங்கத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் தைப்பூச திருவிழா ஜன., 12 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளியுளினார்.
நேற்று (ஜன., 20ல்) சிறப்பு யாக சாலை பூஜைகள், உற்ஸவ மூர்த்திக்கு மஹா அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. பின் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று (ஜன., 21) காலை, யாகசாலை பூஜையும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தொடர்ந்து கலச அபிஷேக பூஜையும், மாலையில் கொடி இறக்கமும் நடக்கும்.
விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்தனர்.