பதிவு செய்த நாள்
22
ஜன
2019
11:01
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த ஐயப்ப பக்தர் சங்கமத்தில் திரண்ட கூட்டத்தால், மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பினராயி விஜயனுக்கு சபரிமலை ஐதீகம் தெரியவில்லை, என்று மடாதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.பெண்களை சபரிமலையில் தரிசனம் செய்யவைப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் பினராயி விஜயன். பிந்து, கனகதுர்கா என இருவரை அதிகாலையில் ஊழியர்களுக்கான வாசல் வழியாக அழைத்து சென்று தரிசனம் செய்யவைத்தார்.
அதன் பின் நடந்த பல முயற்சிகள் தோல்வி அடைந்தன. ஆனாலும் 51 இளம் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக பொய் கணக்கை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மேலும் கோபம் அடைந்தனர்.சபரிமலை சீசன் முடிந்த நிலையில் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் சபரிமலை கர்ம சமிதி ஐயப்ப பக்தர் சங்கமத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று முன்தினம் திருவனந்தபுரம் புத்தரி கண்டம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பொது மேடைகளுக்கு வராத மாதா அமிர்தானந்தமயி இந்த கூட்டத்தில் பேசியதாவது: சபரிமலை ஐதீகம் பற்றி தெரியாததால்தான் பல துரதிருஷ்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆண், பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள் நடத்தப்படுவதால் அது பாலின பாகுபாடு என்று கூறமுடியாது, அதுபோலதான் சபரிமலையும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஐதீகம் உண்டு. சிலை பிரதிஷ்டைக்கு ஏற்ப ஐதீகங்கள் மாறுபடும். கடல், தொட்டியில் வளரும் மீன், ஆற்றில், நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர் இவற்றில் உள்ள வித்தியாசம போல சிலை பிரதிஷ்டைக்கு ஏற்ப ஐதீகம் மாறுபடும். காலத்துக்கு ஏற்ற மாற்றம் தேவை. ஆனால் ஒரு கோயிலை பாதிக்கும் வகையில் மாற்றம் ஏற்படுத்தினால் குளிப்பாட்டி, குளிப்பாடி இறுதியில் பிள்ளை இல்லாத நிலை போல வந்துவிடும். கோயில்கள் கலாசாரத்தின் துாண்கள். அவற்றை பாதுகாக்க வேண்டும். இல்லை எனில் நூல் அறுபட்ட பட்டம் போல் ஆகிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.சுவாமி சிதானந்தபுரி பேசியதாவது:சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் அதை குலைக்க சதி நடக்கிறது. இந்து சமூகத்தை சபரிமலை விஷயம் மூலம் ஒருங்கிணைய செய்த பெருமை பினராயி விஜயனுக்கு மட்டுமே உண்டு. சாமியார்கள் உள்ளாடை அணிகிறார்களா என்பதை கண்காணிக்க கேரளாவில் ஒரு அமைச்சர் உள்ளார். கோயில் ஐதீகங்களில் அரசின் தலையீடு, கம்யூ., கட்சியினரையும் வேதனை அடைய செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அனுப்பிய வீடியோ பேச்சில், மத உணர்வுகளையும், பக்தர்களின் உரிமையையும் காயப்படுத்துவது சரியல்ல, என்றார்.இந்த கூட்டத்தை கண்டு முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் ஆளும் இடது முன்னணி ஆடிப்போய் உள்ளது.