பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட, 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, ஏற்கனவே தெரிவித்த தகவல் தவறானது; 17 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்தனர் என கூறி, கேரள மாநில, இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, வேறு ஒரு பட்டியலை வெளியிட்டு உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை, அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு, ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தின. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து, 40, கனகதுர்கா, 34, என்ற இரண்டு பெண்கள், பம்பையிலிருந்து, சபரிமலைக்கு, போலீசார்உதவியுடன் சென்று, தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்ததை அடுத்து, பாதுகாப்பு கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் விசாரணையின் போது, சமீபத்தில் முடிந்த, மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில், 10 - 50 வயதுடைய, 51 பெண்கள், தரிசனம் செய்துள்ளதாக, கேரள அரசு பட்டியல் தாக்கல் செய்தது. இந்த பட்டியல் தவறானது என்றும், அதில், பல குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து,பட்டியலில் திருத்தம் செய்ய, கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக, கேரள தலைமைச் செயலர், டாம் ஜோஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, புதிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.
பட்டியல்: அதன் விபரம்: முதலில் வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த, 30க்கும் அதிகமான பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். மேலும், நான்கு பேர் ஆண்கள்; இவர்களது பெயர்கள், தவறுதலாக பட்டியலில் சேர்க்கப்பட்டன. எனவே, பழைய பட்டியலில் இருந்து, 34 பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. இதன்படி, இந்த மண்டல காலத்தில், சபரிமலை கோவிலில், 10 - 50 வயது வரையிலான, 17 பெண்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.