நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் 22.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி போன்றே மூலவரும், சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சிலை ஏழரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜன. 22 முதல் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி காலை 7:00 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் குடங்கள் திருப்பதி குடைகள் புடைசூழ, எடுத்து வரப்பட்டு 7:15 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோயிலுக்குள் சென்று தரிசனம் நடத்த அனுமதிக்கப்பட்டனர். 8:35 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மாலை 4:00 மணிக்கு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் ஸ்பிரே செய்யப்பட்டது. லட்டு, தயிர்சாதம், புளியோதரை போன்றவை பிராசதமாக வழங்கப்பட்டது.