பதிவு செய்த நாள்
01
பிப்
2019
01:02
மகுடஞ்சாவடி: சேலத்திலிருந்து, 15 கி.மீ., தூரத்தில், கஞ்சமலை, காளாங்கி சித்தர்கோவில் உள்ளது. அங்கு, கருவறை பின்புறமுள்ள, வற்றாத தீர்த்தக்குளத்திலிருந்து, சுற்றுவட்டார கோவில்களில் நடக்கும், கும்பாபிஷேக விழாவுக்கு, பக்தர்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்துச்செல்வர்.
இக்குளத்தில், தினமும் அர்ச்சகர் நீராடியபின், அதிலுள்ள நீரை, குடத்தில் எடுத்து வந்து, மூலவருக்கு அபிஷேகம் செய்வர். பிரதி அமாவாசையில், நூற்றுக் கணக்கான பக்தர்கள், தங்கள் உடலில் உள்ள மரு, தோல் வியாதிகள் குணமாக, உப்பு, மிளகை, தங்கள் தலையை சுற்றி, குளத்தில் வீசிச்செல்வர். இந்நிலையில், குளத்தின் உட்பகுதியில், கிழக்கு புறமாக வந்துகொண்டிருந்த ஊற்றுநீர், கடந்தாண்டு நின்றதால், குளம் வறண்டது. இதனால், 500 மீ., தொலைவிலுள்ள முருகன் கோவிலிலிருந்து, ஆழ்துளை கிணறு மூலம், குளத்துக்கு நீரை நிரப்பி, அதை அபிஷேகத்துக்கு பயன்படுத்தினர். நேற்று (ஜன., 31ல்), குளத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.
இதுகுறித்து, பரம்பரை குருக்கள் சிவமணி கூறியதாவது: என் தாத்தா காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் கூட, இந்த, 15 அடி ஆழமுள்ள குளம் வற்றவில்லை. தற்போது வறண்டது கவலையளிக்கிறது. இதனால், மூலவர் காளாங்கி சித்தர் சுவாமியிடம், ஆழ்துளை கிணறு அமைக்கலாமா, குளத்தை ஆழப்படுத்தலாமா என, பூ வாக்கு கேட்டோம். அதில், ஆழப்படுத் தினால் தண்ணீர் கிடைக்கும் என உத்தரவு கிடைத்தது.
இதனால், பல்வேறு ஒப்பந்ததாரர்கள் பங்களிப்புடன், குளத்தை, 6 அடி வரை ஆழப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் பணி முடியும். இவ்வாறு அவர் கூறினார்.