பதிவு செய்த நாள்
09
பிப்
2019
04:02
புதுச்சேரி:கதிர்காமம், முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த செடல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், செடல் திருவிழா, கடந்த மாதம் 31ம் தேதியன்று துவங்கியது.
தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் வீதியுலாவும் நடந்து வந்தது. செடல் திருவிழா நேற்று (பிப்., 8ல்) நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் வீதியுலா நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், வழுதாவூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
நமச்சிவாயத்தை ஆசிர்வதித்த ரங்கசாமி கதிர்காமம் கோவிலில் நடந்த செடல் திருவிழாவில், காங்., தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கலந்து கொண்டார். செடல் அணிவதற்காக கோவிலுக்குள் நமச்சிவாயம் சென்றபோது, தரிசனம் முடித்துவிட்டு எதிர்கட்சி தலைவரும், நமச்சிவாயத்தின் சிறிய மாமனாருமான ரங்கசாமி வெளியே வந்தார்.இருவரும் நேருக்கு நேராக சந்தித்து கொண்டனர். ரங்கசாமிக்கு, நமச்சிவாயம் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். ரங்கசாமி தனக்கே உரிய பாணியில் நமச்சிவாயத்தின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.