கம்மாபுரம்: தீ மிதி திருவிழாவையொட்டி, கம்மாபுரம் அடுத்த ஊ.கொம்பாடிக்குப்பம் பொன்னாலகரம் திரவுபதியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.திரவுபதியம்மன் கோவிலில், 147வது ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் திரவுபதியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக நேற்று (பிப்., 21ல்) காலை 10:00 மணியளவில், அரவான் களபலி நிகழ்ச்சியும், மாலை 5:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடந்தது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 22ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.