பதிவு செய்த நாள்
08
ஏப்
2019
01:04
மக்களாட்சி தேர்தல் முறையில், உலகின் முன்னோடியாக, பழங்கால தமிழகம் விளங்கியதை, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டு விளக்குகிறது. இந்த காலத்தில், தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம், பல்வேறு விதிமுறைகளை அறிவித்து, கெடுபிடியுடன் பின்பற்ற அறிவுறுத்துகிறது. எனினும், அதையும் மீறி, பலம் பொருந்திய அரசியல் கட்சிகள், பலவிதமான முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. ஆனால், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், நேர்மையான முறையில், மக்களாட்சி தத்துவத்தை போற்றும் வகையில், தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் பராந்தக சோழ மன்னன், கி.பி., 10ம் நுாற்றாண்டில், இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளார். அக்காலத்தில், உத்திரமேரூர், சதுர்வேதி மங்கலம் என, குடும்புகள் எனப்படும், 30 சிறுபகுதிகளுடன் விளங்கியுள்ளது. பொருள், பொன், ஏரி, தோட்டம் போன்ற நிர்வாகத்திற்கு, தனித்தனி வாரியங்களுடன், குடும்புகள் செயல்பட்டுள்ளன. அவற்றை நிர்வகிக்க, மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, மக்களாட்சி தேர்தல், கி.பி., 919ல், முதலில் நடத்தப்பட்டுள்ளது.தகுதியான நபர்களின் பெயரை, பனையோலையில், எழுத்தாணியால் எழுதி, அவற்றை குடத்தில் இட்டு, விபரமறியா சிறுவன் மூலம், ஒரு ஓலையை எடுக்கச் செய்துள்ளனர்.அந்த ஓலையில் இருக்கும் பெயரை உடையவர், மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் முறை, குடவோலை தேர்தல் என சிறப்பு பெற்றது.
குடத்தில் ஓலைகளில் பெயர் எழுதி போட்டு, அதன்படி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், குடவோலை முறை என, அழைக்கப்பட்டது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், ஓராண்டு. போட்டியிடும் முன், மூன்றாண்டுகள் பதவி வகித்திருக்க கூடாது. பதவிக்கு பிறகும், மூன்றாண்டுகள் போட்டியிடவும் தடை இருந்துள்ளது. பதவியின் போது, தவறிழைத்தால், பதவி பறிக்கப்படும் என, கடுமையான நிபந்தனைகளின் படியே, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் தகுதிகள்: கால் வேலி, சொந்த நிலத்திற்குரியவர்; சொந்த மனை, வீடு வைத்திருப்பவர்; வயது, 35 - 70 வரை உள்ளவர்; வேதங்களில் புலமை பெற்றவர் போட்டியிட்டுள்ளனர்.
போட்டியிட தகுதியற்றோர்: பதவி வகித்த பிறகு, நிர்வாக கணக்கு அறிவிக்காதவர் மட்டுமின்றி, அவரின் உறவினர்களும் போட்டியிட தகுதியற்றவர்கள்; பிறர் மனைவியை புணர்ந்தவன்; மகா பாவங்களான, கொலை, திருட்டு புரிந்தவன்; பொய் உரைத்தவன்; கள் அருந்தியவன்; உண்ணக்கூடாததை உண்டவன்.
இதுகுறித்து பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், வைகுண்ட பெருமாள் கோவிலில், தற்போதும் உள்ளன. இப்போதிலிருந்து, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, கடும் நிபந்தனைகள் விதித்து, நேர்மையாளர்களை தேர்ந்தெடுத்து, மக்களாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளனர், நம் முன்னோர்.இந்த நாட்டில் தான், தேர்தலில் பணப்புழக்கம், வசைபாடல், கள்ள ஓட்டு, பொய் வாக்குறுதி என, முறைகேடுகள் நடக்கின்றன; நம்மை தலைகுனிய செய்கின்றன. - நமது நிருபர் -