பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
11:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு 62 அடி உயர தங்கக்கொடிமரத்தில் நேற்று காலை 10:05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதைமுன்னிட்டு காலை 9:15 மணிக்கு விநாயகர், முருகன், தண்டீஸ்வரர், காலை 9:30 மணிக்கு பிரியாவிடையுடன் சுவாமி, பச்சைப்பட்டு உடுத்தி, கையில் தங்கக்கிளியுடன் அம்மன் தங்கக்கொடிமரம் முன் எழுந்தருளினார்.
ஸ்தானிக பட்டர் முன்னிலையில் காப்புக்கட்டிய சுவாமிநாதன் பட்டர் தங்கக்கொடிமரத்துக்கு பூஜை நடத்தினார். ஓதுவார்கள் தேவாரம், திருப்புகழ் பாடினர். காலை 10:05 மணிக்கு கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. தங்கக் கொடிமரத்துக்கு புனித நீரூற்றப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தீபாராதனைகள் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர். போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்து கொண்டார்.
தக்கார் கூறியதாவது: ஏப்.,15 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.,16 திக்குவிஜயம், ஏப்.,17 திருக்கல்யாணம், ஏப்.,18 தேரோட்டம் நடக்கிறது. திருக்கல்யாண மணமேடை பகுதிகளில் 200 டன் ‘ஏ.சி’ வசதி செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பூக்கள் மற்றும் வெட்டிவேர்களால் மேடை அலங்கரிக்கப்படும். சித்திரை வீதிகளில் மேற்கூரை அமைக்கப்படும். திருக்கல்யாணத்தை காண 20 இடங்களில் அகண்ட எல்.சி.டி., திரைகள் வைக்கப்படும்.
திருவிழாவிற்காக உபயதாரர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கோயில் சார்பில் திருக்கல்யாண விருந்து, பிரசாதம் வழங்கப்படும். கட்டண டிக்கெட் 6,400 பேர், உபயதாரர்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது. 3,500 பேருக்கு கட்டணமில்லா தரிசனம் செய்ய முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாகவும், 200 ரூபாய், 500 ரூபாய் கட்டண தரிசனம் செய்வோர் வடக்கு கோபுரம் வழியாகவும், வி.ஐ.பி.,க்கள், உபயதாரர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். கோயில் கடைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவை செயல்படுத்துவோம், என்றார்.