கிள்ளை: கிள்ளை அருகே சி.முட்லுார் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று தேர்பனியும் தீமிதி உற்சவமும் வெகுவிமர்சியாக நடந்தது. சுற்று பகுதியினர் பங்கேற்று தேரை தோளில் சுமந்து வீதியுலா காட்சியாக வந்தனர். கிள்ளை அருகே சி.முட்லுார் திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 19 நாட்கள் தொடர் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 22 ம் தேதி காப்புக்கட்டி, கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி உபயதார்கள் பல்வேறு வகையில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வந்தனர். ஏழாம் நாள் உற்சவமாக திரவுபதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாலை 5.00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் இருந்து கரகப்புறப்பாடு துவங்கி கோவிலை வந்தடைந்தப் பின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியை அப்பகுதியினர் தோளில் சுமந்து வீதியுலா காட்சியாக வலம் வந்தனர். அதன்பின் தீ மிதி உற்சவத்தில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினசரி மாலை 7.00 மணிக்கு சுவாமி வீதியுலா காட்சியும், இரவு 9.00 மணிக்கு மகாபாராத உபன்யாச நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று மஞ்சல் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர்.