முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி உற்ஸவ விழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அக்னிசட்டி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கிராமத்தில் உள்ள ஊரணிகரையில் இருந்து எடுத்து உலகம்மாள் கோயில், முளைக்கொட்டு திண்ணை வழியாக ஊர்வலமாக 108 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்து சென்றனர். பின் அம்மனுக்கு பால் அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சீலைக்காரி அம்மன் மலர்களால் அலங்கரிக்கபட்டார். விழா கமிட்டி தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொது அன்னதானம் நடைபெற்றது.