பதிவு செய்த நாள்
10
மே
2019
02:05
புதுச்சேரி: புதுச்சேரி அருகே, பஞ்சவடீயில் உள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், இன்று (10ம் தேதி) காலை, வேங்கடாசலபதி திருமேனி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில், புதுச்சேரியில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் உள்ள பஞ்சவடீயில், பிரசித்தி பெற்ற, 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், மூலவர் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி, ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்திக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.தற்போது,
வேங்கடாசலபதிக்கு தனி சன்னதி அமைக்கப்பட உள்ளது.
திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானம் சார்பில், வேங்கடாசலபதி சுவாமியை போலவே, திருமலையில் உள்ள கல்லை கொண்டு, 7.5 அடி உயரத்தில், இரண்டு டன் எடையில், புதிய சிலை செய்யப்பட்டுள்ளது. இச்சிலை, கடந்த மார்ச் 21ம் தேதி பஞ்சவடீ கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 48 நாட்கள் தான்யவாசம், ஜலாதிவாசம் செய்யப்பட்டு, இன்று (10ம் தேதி) வேங்கடாசலபதி திவ்யமங்கள திருமேனி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
விழாவையொட்டி, நேற்று (மே., 9ல்) மாலை 5:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, புண்யாஹ வாசனம், யஜமானர் சங்கல்பம், அக்னி மதனம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி
நடந்தது.இன்று (10ம் தேதி) அதிகாலை 4:30 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூபம், யஜமானர் சங்கல்பம், மூலமந்திர ஹோமம், காலை 6:30 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் யந்தர பிரதிஷ்டை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு மேல் ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி திவ்ய மங்கள திருமேனி பிரதிஷ்டை நடக்கிறது.
பாப்பாக்குடி வெங்கடேச பட்டாச்சாரியார், சிலையை பிரதிஷ்டை செய்து வைக்கிறார். பிரதிஷ்டை விழாவின்போது, உலக நன்மை மற்றும் மழை வேண்டி, 54 வீணை கலைஞர்கள் கலந்து கொள்ளும் இசை கச்சேரி, காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நுனி வாழை இலையில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.விழா ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பொருளாளர் கச்சபேஸ்வரன் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.